Published : 25 Feb 2021 02:30 PM
Last Updated : 25 Feb 2021 02:30 PM

சீமானிடமிருந்து விலகல்: மன்சூர் அலிகானின் புதிய கட்சி தமிழ் தேசிய புலிகள்

சீமானுடன் மன்சூர் அலிகான் | கோப்புப் படம்.

சென்னை

சீமானின் நாம் தமிழர் கட்சியில் அதிரடி காட்டிய மன்சூர் அலிகான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் என்கிற கட்சியைத் தொடங்கியுள்ளார்.

சீமான் நாம் தமிழர் என்கிற கட்சியைத் தொடங்கி, பல தேர்தல்களில் தனித்து நின்று களம் கண்டு வருகிறார். அவரது மேடைப்பேச்சு, பிரச்சார உத்தி, ஒரு விஷயத்தை அணுகும் விதம், அளிக்கும் பதில் அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். மறுபுறம் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் பழகியது குறித்த தனது பதிவுகளை மேடையில் பேசியதை வைத்துப் பலரும் விமர்சித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. ‘

ஆனாலும், சீமானின் பாணி அவரது பேச்சுத் திறன், விஷய ஞானம் தமிழக அரசியல் தலைவர்களில் தனித்துவமாகத்தான் நிற்கிறது. சீமானின் பேச்சாற்றல், மொழி குறித்த அவரது பார்வையால் கவரப்பட்ட ஏராளமான இளைஞர்கள், திரையுலகினர் அவரது கட்சியில் இணைந்தனர். மார்க்சியம், பெரியாரியம் மேல் பற்று கொண்டிருந்த இயக்குநர் மணிவண்ணன் கடைசிக் காலத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.

தனது மறைவுக்குப் பின் தன் உடல் மீது நாம் தமிழர் கட்சியின் கொடி போர்த்தப்படவேண்டும் என ஆசைப்பட்டார். அதன்படி அவர் உடல் மீது நாம் தமிழர் கட்சியின் கொடி போர்த்தப்பட்டது. சீமானின் பேச்சால் ஈர்க்கப்பட்டு இணைந்த இன்னொரு பிரபலம் நடிகர் மன்சூர் அலிகான். இவர் தீவிர மொழிப்பற்று மிக்கவர். இலங்கைத் தமிழர்கள் மீது பற்று கொண்டவர்.

இவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்த பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். தனது அதிரடி பிரச்சார உத்தியால் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்த மன்சூர் அலிகான் அந்தத் தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் ஆசைப்பட்டதாகவும், அதற்கு அவரது கோரிக்கையை சீமான் பரிசீலிக்கவும் இல்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்.

புதிதாகக் கட்சியையும் தொடங்கினார். அவரது கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் எனப் பெயரிட்டுள்ளார். மன்சூர் அலிகானின் அதிரடிக்கும், உணர்ச்சி வயப்பட்ட பேச்சுக்கும் அவர் எந்த அளவுக்கு அரசியல் கட்சித் தலைவராக சோபிப்பார் என்பதைப் போகப்போகத்தான் பார்க்க வேண்டும். புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மன்சூர் அலிகான் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x