Published : 25 Feb 2021 01:59 PM
Last Updated : 25 Feb 2021 01:59 PM
புதுச்சேரியில் புதிய சிறிய துறைமுகம் அமைவதால், கடற்கரை நகரங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சாத்தியத்தைத் திறந்துவைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு இன்று (பிப்.25) வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானத்தில் காலையில் கிளம்பி சென்னை வந்த அவர், அங்கிருந்து தனி விமானத்தில் புதுச்சேரிக்கு வந்தார். தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.
விழாவில் காணொலி வாயிலாக, புதுச்சேரி பிரதேசத்தை முன்னேற்றும் விதமாக, புதுவையின் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய ரூ.2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் இடையிலான என்.ஹெச்-45 ஏ தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கும், காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்டவும், சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும், புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் பழைய ஓட்டப்பந்தய ஓடுதளத்தை மாற்றி ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம், மகளிர் விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு ஆணையத்தால் லாஸ்பேட்டையில் ரூ.11.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதி, புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
ரூ.3,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், திறந்து வைத்தும் பிரதமர் மோடி பேசியதாவது:
"புண்ணிய பூமி புதுச்சேரி. மாமனிதர்களின் மகத்தான மண். கல்வியாளர்கள், கவிஞர்களின் தாய்வீடு. புரட்சியாளர்கள் புகலிடமாகவும் இருந்தது. பாரதி இங்கிருந்தார். அரவிந்தர் இக்கடற்கரையில் உலாவினார். இந்த மண் பன்முகத்தன்மையின் அடையாளம். மொழிகள் பல, நம்பிக்கைகள் நூறு. ஆனால், ஒற்றுமை ஒன்று.
புதுச்சேரி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக, பல மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். இது பல்வேறு பணிகளின் அங்கம். புதுப்பிக்கப்பட்ட மேரி கட்டிடத்தைத் திறக்கிறோம். பழமை மாறாமல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது, கடற்கரை அழகுக்கு மேலும் அழகு சேர்த்து, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.
வளர்ச்சியை மேம்படுத்த உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு தேவை. சட்டநாதபுரம் முதல் நாகை வரை 56 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இதனால், தொடர்புகள், பொருளாதார மேம்பாடு வளரும். திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம் ஆகிய இடங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும்.
கடலோரத் தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல சந்தையை உத்திரவாதப்படுத்துவது நமது கடமை. அதை நல்ல சாலைகளும் உறுதி செய்யும்.
ஆஸ்தி ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இதற்கான பல பணிகளை அரசு செய்துள்ளது. தற்போது சிந்தெடிக் ஒடுதளத்துக்கான அடிக்கல் நாட்டியுள்ளோம். இது, விளையாட்டுத் திறனை வளர்க்கும். விட்டுக்கொடுத்தலைக் கற்றுத்தரும். விடாமுயற்சியை விளையாட்டே விதைக்கும்.
மிக முக்கியமாக, சுகாதாரத் துறையில் முதலீடு செய்யும் நாடுகளே முன்னேறும். சுகாதாரத்தை அனைவருக்கும் தரும் முயற்சியில் ரூ.28 கோடியில் புதிய திட்டம் ஜிப்மரில் தொடங்குகிறோம். ஜிப்மரில் ரத்த நாளங்களை நீண்ட நாள்களுக்கு இனி பாதுகாக்க முடியும். மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்துள்ளோம்.
நேரடிப் பணப்பரிமாற்ற முறையால் சுய முடிவு எடுக்கும் வசதி புதுச்சேரி மக்களுக்கு உள்ளது. புதுச்சேரி முன்னேற்றத்துக்கு எனது அரசு அனைத்து உதவிகளையும் உத்தரவாதப்படுத்தவே நேரடியாக வந்தேன்".
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT