Published : 25 Feb 2021 01:23 PM
Last Updated : 25 Feb 2021 01:23 PM
வேளாண் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விவசாயிகள் விரும்பாத பிரிவுகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவேண்டும், எழுவர் விடுதலை உள்ளிட்ட தீர்மானங்களை அமமுக நிறைவேற்றியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற அமமுகவின் முதல் பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அதிமுகவை மீட்டெடுப்பது, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதல்வர் ஆக்குவது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
*ஜெயலலிதாவுடன் முப்பது ஆண்டுகாலம் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சசிகலாவுக்கு நல் வாழ்த்துகள்.
*ஜெயலலிதாவின் மக்கள் நல கொள்கைகளைப் பாதுகாக்கப் போராடும் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையின் கீழ் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாக என்றும் பயணிப்போம்.
*குக்கர் சின்னத்தைப் பெற்றுக் கொடுத்து, கட்சியை அனைத்து நிலைகளிலும் கட்டியெழுப்பி சவால்களுக்கும் கட்சியை ஆயத்தமாக்கி காத்துவரும் டிடிவி தினகரனுக்குப் பாராட்டுகள்.
* கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் அரசியல் லாப வேட்டைக்காகச் செயல்பட்டதைப் போலல்லாமல் விவேகமும், வீரமும் கொண்ட தலைவராகச் செயல்பட்ட தினகரனுக்குப் பாராட்டுகள்.
* வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட கட்சிகள் நன்மை பயக்கும் அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு டிடிவி தினகரனுக்குப் பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது.
* டிடிவி தினகரன் இன்றுவரை நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் பொதுக்குழு அங்கீகாரம் வழங்குகிறது.
* சசிகலா சென்னை வந்தபொழுது 23 மணி நேரம் சிறப்பான வரவேற்பு கொடுத்த, கட்டுப்பாடுடன் இருந்த தொண்டர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
* திமுகவுக்கு எதிராக தமிழகத்தைக் காக்க வேண்டிய பெரும் கடமை உள்ள நிலையில், அதை உணர்ந்து வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அப்பணியைச் செய்து முடிக்க பொதுக்குழு சபதம் எடுத்துள்ளது.
* காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய தமிழக நீர் ஆதாரப் பிரச்சினைகளில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் குறிப்பாக வேளாண் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள விவசாயிகள் விரும்பாத பிரிவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதற்கும் மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* 30 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர் விடுதலையை மனிதாபிமான அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் அணுகி விரைவில் அவர்களை விடுவிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்திய குடியரசுத் தலைவர் மேற்சொன்ன எழுவர் விடுதலையை விரைவில் அறிவிக்க வேண்டும்.
* உலகின் இயக்கத்திற்கு பெரும் காரணியாக திகழும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாங்க முடியாத பெரும் சுமையாக பொதுமக்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. அதனைப் போக்கும் வகையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டுவர வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* மாநில அரசு அமைத்துள்ள சுங்கச்சாவடிகளை முழுமையாக ரத்து செய்யவும், மத்திய அரசு சுங்கச்சாவடிகளைக் குறைக்கவும், சாவடிகளில் காலத்திற்கேற்ற வகையில் வண்டிகளின் எண்ணிக்கை பெருக்கத்திற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
டிடிவி தினகரனை முதல்வராக்குவோம்
*ஏழை எளியோர், பாலகர், வயோதிகர் வரை படித்தவர் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிறந்த நல்லாட்சியை வழங்கிய ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட வேண்டும் என்ற மிகச் சரியான குறிக்கோள், துணிச்சலான தலைமை, தொண்டர்கள், நேர்த்தியான செயல்கள் என அனைத்து நிலைகளிலும் பரிணமித்து வளர்ந்து வரும் அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தவறான நபர்களின் சுயநலத்தால் சிக்குண்டிருக்கும் அதிமுகவை மீட்டு எடுத்திடவும், ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளை வாழவைக்கவும் தமிழகம் தலை நிமிர்ந்துவிடவும், தமிழர் வாழ்வும் மலர்ந்திடவும், சசிகலாவின் நல்வாழ்த்துகளுடன் செயல்படும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தமிழக முதல்வர் அரியணையில் அமரவைக்க அயராது உழைப்பது என பொதுக்குழு சூளுரை ஏற்கின்றது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT