Published : 25 Feb 2021 11:53 AM
Last Updated : 25 Feb 2021 11:53 AM
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் பல்வேறு சங்கத்தினர், தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதன்படி இன்று (பிப். 25) அதிகாலை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி உட்பட பல்வேறு பணிமனைகளில் இருந்து பேருந்துகள் பேருந்து நிலையங்களுக்குச் செல்லவில்லை. பணிமனைகளிலேயே அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் விழுப்புரம் கோட்டத்தில் 3,054 பேருந்துகளில் 90 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்து நிலையங்களில் ஏராளமான பயணிகள் பல மணி நேரமாகக் காத்திருந்தனர். இருப்பினும், பேருந்து நிலையங்களில் இருந்து குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை போன்ற வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும், உள்ளூர் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால், பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதனால், வெளியூர் செல்லும் பயணிகளும், கிராமங்களில் இருந்து வேலைக்குச் செல்வோரும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அவதி அடைந்தனர். இருப்பினும், தனியார் பேருந்துகள் மற்றும் சில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிலும் கூட்டம் அலைமோதியது.
பேருந்துகள் இயங்காததால் ஆட்டோ, கார் போன்றவற்றில் பொதுமக்கள் பயணித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT