Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி, 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்து மகிழ மரக்கன்றை நட்டு வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர். படம்: க.பரத்

சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினத்தை முன்னிட்டு 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகள் தின விருதுகளையும் முதல்வர் வழங் கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் பிறந்த தினம், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை காமராஜர் சாலை ஜெயலலிதா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலையின்கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மகிழமர கன்றை நட்டு இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி பிப்ரவரியில் தொடங்கப்பட்டு டிசம்பரில் முடிக்கப்படும். வனப்பகுதிகள், பள்ளி கள், கல்லூரிகள், பூங்காக்கள், பெரிய அளவிலான குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்.

தமிழகத்தின் பருவநிலை மற்றும் மண்வளத்துக்கு ஏற்ற மரக்கன்றுகளான ஆல், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும்.

பெண் குழந்தைகள் தினம்

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு சாதனை புரிந்துவரும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை களுக்கு மாநில விருது வழங்கப்படுகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் வேலகாபுரம் மேட்டுக்காலனியைச் சேர்ந்த நர்மதாவுக்கு பாராட்டுப் பத் திரம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங் கினார். இவர் தனது கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினராக வும், கிராம முன்னேற்றக் குழு உறுப் பினராகவும் இருந்து சேவையாற்றி வரு கிறார். அரசு மற்றும் தொண்டு நிறுவனங் களுடன் இணைந்து தனது கிராமத்தை, குழந்தை நேய கிராமமாக மாற்ற பெரும் முயற்சி எடுத்து வருவதுடன், பெற்றோர் மத்தியில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர் வையும் ஏற்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் பெண் சிசுக்கொலைகள் குறைந்துவரும் நிலையில், சில மாவட்டங் களில் மட்டும் பாலின விகிதம், சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. இதை கருத்தில்கொண்டு, குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயல்படும் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பரிசுகளும் சான் றிதழ்களும் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 2021-ம் ஆண்டுக்கான, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுக்கு 3 மாவட்ட நிர்வாகங்கள் தேர்வு செய்யப்பட்டன. முதல் இடத்துக் கான விருதை நாமக்கல் மாவட்ட ஆட் சியர் கே.மெகராஜுக்கும், 2-ம் இடத்துக் கான விருதை தருமபுரி ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகாவுக்கும், 3-ம் இடத்துக்கான விருதை திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கும் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட் டையன், செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சரோஜா, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x