Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என எச்சரிக்கை

சென்னை

போக்குவரத்து தொழிலாளர் களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தொமுச, சிஐடியு உட்பட தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் முழு அளவில் ஓடுமா என கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.30 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதற்குதேவையான நிதியை பட்ஜெட்டில்ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தைக் நிர்வாக செலவிடுவதை தவிர்க்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதிவழங்குவது, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அதிகாலை முதல் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 9 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

பேருந்து சேவை என்பது அத்தியாவசியமானது என்பதால், தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் அனைவரும் பணிக்கு வரவேண்டும். மேலும், அன்றைய தினம் முதல்பணி ஓய்வு, வார ஓய்வு, மாற்றுப்பணி ஓய்வு அனுமதி பெற்றவர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்று பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்று அதிகாலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். பெரும்பாலான தொழிலாளர்கள் எங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பில் இருப்பதால், தமிழகம் முழுவதும் 75% பேருந்துகள் ஓடாது.மேலும், எங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திட,எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

‘இன்று வழக்கம் போல் பஸ்கள் ஓடும்; ரூ.1,000 இடைக்கால நிவாரணம்’

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது: ‘‘போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும். அனைத்துப் பேருந்துகளும் நாளை (இன்று) இயங்கும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வுகால பலன்கள் வழங்கப்படும். போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. அரசின் நடவடிக்கையை ஏற்று தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x