Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM
பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று புதுச்சேரி, கோவை வருகிறார். அரசு திட்டங்கள் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் அவர் புதுச்சேரி, கோவையில் நடைபெறும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் பேசுகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த14-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் தமிழகம் வருகிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து இன்று 7.45 மணிக்கு புறப்பட்டு காலை 10.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்கின்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 11.20 மணிக்கு புதுச்சேரி செல்கிறார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அவரை வரவேற்கின்றனர். அங்கிருந்து கார் மூலம்ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்துக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ சாலை பணி, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகளப் பயிற்சிக்கு ‘சிந்தடிக் டிராக்’ அமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார். ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்ட புதிய ரத்த வங்கி, இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் ரூ.18.30 கோடியில் மகளிர் விடுதி, கடற்கரையில் ரூ.14.23 கோடியில் உருவான நகராட்சி நிர்வாக அலுவலமான மேரி கட்டிடம் ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு லாஸ்பேட்டையில் நடைபெறும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் ஜிப்மர் வளாகத்தில் விழா ஏற்பாடுகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று ஆய்வு செய்தார். பிரதமர் வருகையையொட்டி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு பகல் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் மோடி 2.10 மணிக்கு சென்னை விமான நிலையம் திரும்புகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 3.35 மணிக்கு கோவை சென்றடைகிறார். அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
பின்னர் காரில் கொடீசியா வளாகத்தில் மாலை 3.50 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில், ரூ. 8 ஆயிரம் கோடியிலான நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டம், ரூ. 3 ஆயிரம் கோடியிலான திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி திட்டம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம், ரயில்வே பாலம் ஆகிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் தொடங்கி வைக்கிறார்.
வ.உ.சி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகா வாட் சூரியமின் சக்தி தொகுப்பு, கீழ் பவானிதிட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக் கல் திட்டம் ஆகியவற்றுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
அரசு விழா முடிந்ததும் மாலை 5 மணிக்கு கொடீசியா மைதானத்தில் நடைபெறும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கோவை நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மாலை 6 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் அவர், 9.15 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT