Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM
எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலின் அதிமுக அரசை வீழ்த்த முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வடசென்னை, வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வதுபிறந்தநாள் விழா ஆர்.கே. நகர்தொகுதியில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று, ஆர்.கே.நகர் தொகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் 30 ஆயிரம் பேருக்கு, அவர்கள் தொழில் செய்து வருவாய் ஈட்டும் விதமாக இஸ்திரி பெட்டி, மாவு அரவை இயந்திரம், தையல் இயந்திரம், தள்ளுவண்டி, இட்லி பாத்திரம், சைக்கள் இருசக்கர மோட்டார்வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னதாக அவர் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரும், ஜெயலிதாவும் ஏழை எளிய மக்களின் மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்கின்றனர். அதனால் தான் உலகில் தமிழர் வாழும் பகுதி எல்லாம் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்த இருபெரும் தலைவர்களின் வழியில் இங்கு 30 ஆயிரம் பேருக்குநலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்த அரசு பல்வேறு சாதனைகளை புரிந்து மக்கள் மனதில் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு இந்த அரசு, கரோனாவை கட்டுப்படுத்தி, நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை முறையை, மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிஅறிவுறுத்தியுள்ளார். கரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை எளியமக்களுக்கு 3 வேளையும் அம்மாஉணவகம் மூலமாக இலவசஉணவு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அரசு எதையும் செய்யவில்லை என பொய்யான தகவலை பரப்பி, குற்றம்சாட்டி வருகிறார். அவருக்கு இந்த அரசுசெயல்படுத்தி வரும் திட்டமும் தெரியவில்லை. சட்டப்பேரவைக்கும் வருவதில்லை. அவர் அதிமுக அரசை வீழ்த்த பல்வேறு அவதாரங்கள் எடுத்து வருகிறார். அவர் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அதிமுக அரசை வீழ்த்த முடியாது என்றார்.
விழாவில் கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி.பிரபாகர்,முன்னாள் எம்பி எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT