Published : 19 Nov 2015 05:58 PM
Last Updated : 19 Nov 2015 05:58 PM
குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகைதரும் 2-வது சீஸன் தொடங்கியிருக்கும் நிலையில், அங்கு அடிப்படை வசதிகளை செய்துதர சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் சீஸன் களைகட்டும். அப்போது, நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், குற்றால சாரலை அனுபவிக்கவும், பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழவும் வருகிறார்கள்.
இரண்டாவது சீஸன்
இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் கார்த்திகை 1-ம் தேதி முதல் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகையால், குற்றாலத்தில் 2-வது கட்ட சீஸன் தொடங்கும். அந்த வகையில் குற்றாலத்தில் நேற்று 2-வது சீஸன் தொடங்கியது.
ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் நீராடி பூஜைகளை மேற்கொண்டு விரதம் தொடங்கினர். சபரிமலையில் மகரஜோதி தரிசன நாள் வரை தொடர்ந்து இரு மாதங்களுக்கு குற்றாலத்தில் பக்தர்கள் வருகை காணப்படும்.
ஐயப்ப சீஸன் காலத்தில் குற்றாலத்தில் கடைகளை ஏலத்தில் விடுவது, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க உரிமம் அளிப்பது என்று பல்வேறு வகையில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் சுமார் ரூ.2 கோடி முதல் 3 கோடி வரை வருமானம் ஈட்டுகின்றன. ஆனால், அந்த தொகையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
திறந்தவெளியில் சமையல்
குற்றாலத்துக்கு வேன்கள், பஸ்களில் வரும் வெளியூர் பக்தர்கள் சமையலுக்கு தேவையான பொருட்கள், அடுப்பு, கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை கொண்டுவருகின்றனர். உரிய இடம் ஒதுக்கித் தராததால் மழை பெய்து வரும் நிலையில் சாலையோரங்களில் திறந்தவெளியில் சமையல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சமையல் செய்வதற்கு இடம் ஒதுக்கி கூரை வேய்ந்து தரவேண்டும்.
கடந்த 1992-ம் ஆண்டில் குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் குற்றாலநாத சுவாமி கோயிலின் வடக்குவாசல் பகுதியில் பக்தர்கள் சமையல் செய்வதற்கான இடத்தில் இருந்த கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன. அவற்றை சீரமைத்துத்தர இதுவரை முன்வரவில்லை.
அடிப்படை வசதிகள்
வாகனங்களை நிறுத்த போதிய இடத்தை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும். தற்போது வாகன நிறுத்துமிடங்களில் நிரந்தர கடைகளை கட்டி வாடகைக்கு அளிக்க பேரூராட்சி நிர்வாகம் முயற்சிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.
பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகளும் போதுமான அளவு செய்து தரப்படவில்லை.
கோயில் வாசல் பகுதியில் இளைப்பாறும் மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தை பக்தர்கள் பயன்படுத்த முடியாதபடி, மதியம் 12 மணி அளவில் கோயில் நடை அடைக்கப்பட்டதும் 2 கேட்களையும் பூட்டிவிடுகிறார்கள். கோயில் வாசல் மண்டபத்தை திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
குறைவான காவலர்கள்
குற்றாலத்தில் அருவிக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில்தான் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. திடீரென்று வெள்ளம் ஏற்படும்போது பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் அங்கிருந்து வெளியேற்ற ஒருவரால் மட்டும் முடியாது. எனவே இந்த சீஸன் காலத்தில் கூடுதலாக போலீஸாரை பணியமர்த்த வேண்டும்.
குற்றாலத்தில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து தென்காசி ஒன்றிய பாஜக நிர்வாகி திருமுருகன் கூறும்போது, “பிரதான அருவிப் பகுதியிலுள்ள பூங்கா பராமரிப்பின்றி, செடி, கொடிகள் மண்டியிருக்கின்றன. இந்த இடத்தில் பக்தர்கள் சமையல் செய்ய இடம் ஒதுக்கித்தர வேண்டும். அருவியில் புனித நீராடிவி்டடு குற்றாலநாதர் கோயிலுக்கு செல்லும்போது பக்தர்களிடையே நெரிசல் ஏற்படாமல் இருக்க தெற்குவாசல் மற்றும் கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார் அவர்.
குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்
குற்றாலநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் கணேசனிடம் கேட்டபோது, “ரதவீதிகளின் 5 முக்கிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கவுள்ளோம். குப்பைகளை சேகரித்து உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கோயிலில் கிழக்குவாசல் வழியாக சென்று, சுவாமி தரிசனம் செய்துவிட்டு வடக்குவாசல் வழியாக வெளியே செல்லும் வகையில் ஒருவழிப்பாதைத் திட்டத்தை அமல்படுத்தவுள்ளோம்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT