Published : 25 Feb 2021 03:17 AM
Last Updated : 25 Feb 2021 03:17 AM
சாத்தனூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் இருந்து ஏரிக்கு தண்ணீர் செல்வதற்காக பொதுமக்கள் நிதி திரட்டி அமைத்த கால்வாய்க்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நள்ளிரவில் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாத்தனூரில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் குருமந்தன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து கால்வாய் வெட்டி தண்ணீரை திருப்பிவிட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். இதுவரை அரசு தரப்பில் இருந்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, சாத்தனூர், கொழுந்தம்பட்டு, கரிப்பூர், தரடா பட்டு, வணக்கம்பாடி, ராதாபுரம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி கால்வாய் வெட்டும் பணியை ஒரு மாதத்துக்கு முன்புதொடங்கியுள்ளனர். இதற்கு, பொதுப்பணித்துறை மற்றும்வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. ஆனால், அதை பொருட் படுத்தாமல் கால்வாய் வெட்டும் பணியை நேற்று முன்தினம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முடித்துள்ளனர். மேலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து தடுப்புகளை உடைத்து கால்வாயில் தண்ணீரை திருப்பி விட்டுள்ளனர்.
இந்த தகவலறிந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு கால்வாயில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்ததகவல் நேற்று காலை சாத்தனூர்கிராம விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் இந்த நடவடிக் கையை கண்டித்து சாத்தனூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்கம் துணை காவல் கண்காணிப் பாளர் சரவணகுமார், வட்டாட்சியர் மலர்கொடி உள்ளிட்டோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கூறியதால் சாலை மறியலை கைவிட்டனர்.
இது தொடர்பாக போராட்டக் குழுவினர் கூறும்போது, ‘‘சாத்தனூர்கிராமத்தில்தான் அணை இருந்தாலும் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்ட அணையில் இருந்து எங்களுக்கு 2000-ம் ஆண்டுதான் குடிநீர் கிடைத்தது. குருமந்தன் ஏரிக்கு தண்ணீரை நிரப்பி அதில் இருந்து வீரணம், தரடாபட்டு, வணக்கம்பாடி ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிக்கொள்ள நாங்களே ரூ.50 லட்சம் அளவுக்கு நிதியை திரட்டி கால்வாய் வெட்டும் பணியை தொடங்கினோம். அது வரை அமைதியாக இருந்தவர்கள் தண்ணீர் வரும் நேரத்தில் தடுத்து நிறுத்துவதை ஏற்க முடியாது’’ என தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுக்க அனுமதியில்லை. ஆனால், இவர்கள் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவுக்கு 2 மீட்டர் அகலம் கொண்ட கால்வாய் வெட்டி ஏற்கெனவே உள்ள ஏரி கால்வாயுடன் இணைத் துள்ளனர். இதனால், மழை காலங்களில் நீர்வரத்து அதிகம் ஏற்பட்டால்ஊருக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படும். கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியபோதே காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாராக கொடுத்து விட்டோம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை (இன்று) கூட்டம் நடைபெற உள்ளது’’ என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT