Published : 24 Feb 2021 05:32 PM
Last Updated : 24 Feb 2021 05:32 PM
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரம் அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
தமிழக முதல்வர் பழனிசாமி தனது 6-வது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18,19-ம் தேதிகளில் மேற்கொண்டு முடித்திருக்கிறார்.
இதுபோல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 5,6,7-ம் தேதிகளில் பிரச்சார பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசியிருந்தார்.
இந்த இரு தலைவர்களின் பிரச்சார நிகழ்ச்சிகளால் 4 தென்மாவட்டங்களிலும் தேர்தல் திருவிழா களைகட்டியது. தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதில் இருந்து, அவர்கள் பயணம் செய்யும் பாதை முழுக்க சுவரொட்டிகள், வரவேற்பு பதாகைகள், கொடித்தோரணங்களை கட்டுவது, பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒரே இடத்தில் திரட்டுவது என்றெல்லாம் அதிமுக, திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சுறுசுறுப்பாக செயல்பட்டிருந்தனர்.
இதனால் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவர்களுக்கும் மகிழ்ச்சி. அந்தந்த பகுதி நிர்வாகிகளை அவர்கள் பாராட்டவும் தவறவில்லை.
பிரச்சார நிகழ்ச்சிகளில் 3 குழந்தைகளுக்கு முதல்வர் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதுபோல் தொண்டர்களுக்கு கை கொடுத்தும், செல்பி எடுத்தும் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இருவரின் நிகழ்ச்சிகளும் டிஜிட்டல் மயமாக இருந்தது. தலைவர்களின் பிரச்சாரத்தின்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது.
அதேநேரத்தில் பிரச்சாரத்தைக் கேட்க திரண்டிருந்தவர்கள் மத்தியில் வழக்கமான ஆரவாரம் இருக்கவில்லை. பிரச்சார பொதுக்கூட்டங்களின் தொடக்கத்தில் நிரம்பியிருந்த இருக்கைகள் பலவும் பாதியிலேயே காலியாகும் நிலையும் காணப்பட்டது. ஏற்கெனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பேசிய விவரங்களை கிளிப்பிள்ளை போல் மீண்டும் மீண்டும் சொல்லியதால் அதை கேட்க திரண்டிருந்தவர்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை.
தமிழக தலைவர்களின் முதற்கட்ட பிரச்சார பயணத்தால் தென்மாவட்டங்களில் தேர்தல் திருவிழா சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் இவர்களது 2-ம் கட்ட பிரச்சார பயணம் இருக்கலாம்.
அதற்குமுன் தேசியத் தலைவர்களான பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு தென்மாவட்டங்கள் காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT