Published : 24 Feb 2021 02:19 PM
Last Updated : 24 Feb 2021 02:19 PM
இந்தக் காலகட்டத்தில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளதே என்ன காரணம் என்பதை அரசு சொல்லவேண்டும், வெற்றிநடை போடும் தமிழகம் என்பதைவிடக் கடனில் தள்ளாடும் தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:
“ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளைத் தமிழகம் முழுவதும் அமமுக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் கொண்டாடி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தல் நேரத்தில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று சசிகலா கேட்டுக்கொண்டார். அவர் சொல்வது ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்று சொல்கிறார். அது அதிமுக தொண்டர்களா? அமமுக தொண்டர்களா என்பது எனக்குத் தெரியாது.
அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி நாளை முதல் பொதுக்குழு கூடி முடிவு செய்ய உள்ளோம். நாங்கள் சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது. பேசி முடித்தவுடன் அறிவிப்போம். அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்.
ஊழலுக்காக ஒரு ஆட்சியைக் கலைத்தார்கள் என்றால் அது திமுக ஆட்சிதான். அதுதான் என் கருத்து. எங்களின் பொது எதிரி திமுக. இப்போதுள்ள ஆளுங்கட்சியை உருவாக்கியது நாங்கள்தான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
அவர்கள் எங்கெங்கோ போய்விட்டார்கள். உங்களைத் தெரியாது, சசிகலா எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை, டிடிவி யார் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் துணைப் பொதுச் செயலாளர் டிடிவியைத் தேர்ந்தெடுங்கள் என்றெல்லாம் பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அவர்கள் மாற்றி மாற்றிப் பேசி வருகிறார்கள். நான் ஒரே மாதிரிதான் பேசி வருகிறேன். நம்முடைய இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் ஆணைய அறிவிப்பு வந்துவிடும். அதன் பின்னர் இந்த ஆட்சி கிடையாது. தேர்தல் ஆணைய ஆட்சிதான் நடக்கும். அதன் பின்னர் பாருங்கள். அப்போது எது தேவையோ அதைப் பேசுவோம். இணைவதற்கு ஏதோ ஒரு வகையில் ஆளுங்கட்சி பயப்படுகிறது. அது என்ன என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும்.
நேற்று பட்ஜெட்டைப் பார்க்கும்போது தமிழ்நாடு கடனில் தள்ளாடுவதைத்தான் பார்க்க முடிகிறது. எல்லோரும் கவலைப்படும் விதத்தில்தான் கடன் சுமை உள்ளது. மார்ச் மாதம் வரை எந்த ஒரு பணியும் நடக்காத நிலையில் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள் என்பது உண்மையில் மக்கள் மத்தியில் புருவத்தை உயர்த்த வைக்கிறது. அதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று நேற்று நான் சொன்னேன்.
இந்தக் காலகட்டத்தில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளதே என்ன காரணம் என்பதை அரசு சொல்லவேண்டும். வெற்றி நடை போடும் தமிழகம் என்பதைவிடக் கடனில் தள்ளாடும் தமிழகம் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தத் தேர்தலில் அமமுக தலைமையில் அமையும் அணி முதல் அணியாக இருக்கும். நாங்கள் சில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அதுபற்றி கூடிய விரைவில் சொல்கிறேன். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது பற்றி மட்டுமே எங்கள் குறிக்கோள். சசிகலா நிலைப்பாடு குறித்து அவர்தான் சொல்லவேண்டும். அனைத்து விஷயங்களையும் நான் பேச முடியாதல்லவா? அவர் நிலைப்பாட்டை அவர்தான் அறிவிக்கவேண்டும்.
நான் ஆளுங்கட்சியின் நல்லதையும் சொல்வேன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டேன். யாரையும் அவதூறாகப் பேசக்கூடாது என்று நினைக்கிறேன். அமைச்சர் ஜெயக்குமார் எங்களை பி டீம் என்கிறார். அவர் பேச்சை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. கார்த்தி சிதம்பரம் தவறான தகவல் அடிப்படையில் ட்விட்டரில் எனக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று போட்டுள்ளார். அது உண்மையான கருத்தல்ல”.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT