Published : 24 Feb 2021 01:16 PM
Last Updated : 24 Feb 2021 01:16 PM
சசிகலா தமிழகம் திரும்பிய நிலையில் இன்று பொதுவெளிக்கு வந்து பேட்டி அளித்தார். இந்நிலையில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என மும்முரம் காட்டி வருகிறன. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், பாமக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் அதிமுக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதிலும் தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சியை கூட்டணியில் அதிமுக இணைக்குமா? என்கிற அளவுக்கு ஒவ்வொருவரும் அளிக்கும் பேட்டிகள் வெளிப்படுத்துகிறன.
கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் போட்டி என பிரேமலதா பேட்டி அளித்துள்ளார். அதே போன்று சமத்துவமக்கள் கட்சியின் தலைவரின் பேட்டியும் அவரது மன வருத்தத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. இந்நிலையில் சசிகலாவின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
தமிழகம் வந்தப்பின்னர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்த சசிகலா இன்று ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஊடக வெளிச்சத்திற்கு வந்து பேட்டி அளித்தார். அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும், அதிமுக ஆட்சி அமைய வேண்டும், விரைவில் மக்களைச் சந்திப்பேன் என சசிகலா தெரிவித்தார்.
இந்நிலையில் சசிகலாவைக் காண அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் வந்து சசிகலாவைச் சந்தித்தார். அதேப்போன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்து பேசினர்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிற சசிகலாவின் பேச்சும் அவரை முக்கிய பிரமுகர்கள் சந்திப்பதும், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் சந்திக்கத்தொடங்கியுள்ளதும் தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT