Published : 24 Feb 2021 10:08 AM
Last Updated : 24 Feb 2021 10:08 AM
நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை நீதிமன்ற உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பைக் கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது.
இன்று டெண்டர் நடைபெற இருந்த நிலையில் இதற்குத் தடை விதிக்கக் கோரி தூத்துக்குடி தனியார் நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது வழக்கில், 2 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாட்கள் வழங்க வேண்டும்.
இதுகுறித்து டெண்டர் வெளிப்படை சட்டத்தில் விதி உள்ளது. ஆனால், ரூ.1,330 கோடி மதிப்பிலான இந்த டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் டெண்டர் எடுக்கும் வகையில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் விதிகளை மாற்றியிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த டெண்டர் உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்காத வகையிலும் அதேசமயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வகையிலும் வெளியிடப்பட்டதாகும். மேலும், இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள காரணத்தினால் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டதாகவும், மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டதாகத் தெரிவித்தார். டெண்டரை எதிர்த்து வழக்குத் தொடர மனுதாரருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும், அவர் பொதுநல வழக்குதான் தொடர முடியும் என்றும் தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி, டெண்டர் விதிமுறைகளில் மீறல் இருப்பதாகவும், அதை எதிர்த்துதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தங்கள் நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க அனுமதிக்கவே இல்லை என்றும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புகழேந்தி, இந்த வழக்கில் இன்று (பிப்ரவரி 24) உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும், அதுவரை டெண்டரைத் திறக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT