Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM
சட்டப்பேரவை அரங்கில் வ.உ.சி, பி.சுப்பராயன், ஓமந்தூரார் படங்களை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, ‘ஓமந்தூரார் வழிகாட்டிய நேர்மையான அரசியலை முன்னெடுப்போம்’ என்று பேசினார்.
சட்டப்பேரவை கூட்ட அரங்கில்நேற்று செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர்கள் டாக்டர் பி.சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரது படங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நாட்டுக்கு சுதந்திரம் வேண்டிதென்னிந்தியாவில் போராடியவிடுதலை போராட்ட வீரர்களில்மிகவும் முக்கியமானவர் சிதம்பரனார். புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால் அவரது பாரிஸ்டர் பட்டம் பறிக்கப்பட்டது. ஆனால் நாடே அவரை கப்பலோட்டிய தமிழன் என புகழ்பாடுகிறது.
டாக்டர் பி.சுப்பராயன் 1922-ல்நிலச்சுவான்தாரர்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்வானார். அதன்பின், சுயேச்சையாக 1930-ல் தேர்வானார். 1937-ல் ராஜாஜி அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும், 1946-ல் காங்கிரஸ் ஆட்சியில் ஓமந்தூரார் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார். சமூக சீர்திருத்தவாதியாக இருந்த சுப்பராயன், செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சுகபோகமாக வாழாமல், நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப் பணித்தவர்.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக 1947-ம்ஆண்டு பணியாற்றியவர் ஓமந்தூரார். இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க பெரும்பங்காற்றினார். அவர் மறைந்தாலும் அவர் வழிகாட்டிச் சென்ற நேர்மையான அரசியலை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பேரவைத்தலைவர் பி.தனபால் பேசுகையில், ‘‘நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள்,சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க பாடுபட்டவர்களை எதிர்கால தலைமுறைகள் அறிந்துகொள்ள, அவர்கள் உருவப்படங்களை திறந்து மரியாதை செய்யவேண்டியதும் ஒரு நல்லரசின் கடமையாகும். 15-வது சட்டப்பேரவையில்தான் அதிகபட்சமாக 5 பெரும் தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். பேரவை துணைத் தலைவர்பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் கொறடா விஜயதரணி, கொங்கு இளைஞர் பேரவை எம்எல்ஏ உ.தனியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT