Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM
தமிழக மின்வாரியத்தில் 9,613 பேருக்கு இரவோடு இரவாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது,
தமிழக மின் வாரியத்தில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019-ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் தங்கமணி கடந்த 21-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘மின்வாரியம் தனியார்மயமாக்க உள்ளதாக ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. நான் அன்றைய தினமே அதை மறுத்து, ‘மின்சார வாரியம் எந்தச் சூழ்நிலையிலும் தனியார்மயம் ஆகாது. தமிழக அரசின் கீழ் வாரியமாகவே வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோமே தவிர, எந்தக் காலத்திலும் அதை தனியார்மயமாக்க மாட்டேன்’ என்று கூறினேன். கேங்மேன் பணிக்கு 5 ஆயிரம் பேரை எடுப்பதாகத் தெரிவித்திருந்தோம். காலிப் பணியிடங்கள் அதிகமாகியிருந்த காரணத்தால், முதல்வர் 10 ஆயிரம் பேரை எடுக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஆணையிட்டோம். இதில் தடை பெற தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். அவர்களிடத்தில் பணி செய்த நபர்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கினால் அடுத்த கணமே இந்த வாரத்திலேயே 10 ஆயிரம் பேருக்குப் பணி வழங்கத் தயார்” என்றார்.
நீதிமன்றம் அனுமதி
அமைச்சரின் இந்த விளக்கத்துக்கிடையே, புதியதாக கேங்மேன் பணியாளர்கள் தேர்வுக்கான நடவடிக்கைகள், 70 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டது. அதேநேரத்தில் ஒப்பந்த பணியாளர்களும் தொடர்ந்து பணியாற்ற அனுமதி தரப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து, மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 9,613 பேருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பணி நியமன ஆணையை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறது. மேலும், தேர்வர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT