Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
புதுச்சேரி அருகே படுகை அணையில் தண்ணீரின் நிறம் திடீரென மாறி மாசு ஏற்பட்டதால் அதிலிருந்த மீன்கள் இறந்து மிதந்தன. தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணைகட்டப்பட்டது. இந்த அணை பழுதடைந்ததால் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வறண்டு காணப்பட்டது. இதனிடையே கடந்த பருவமழை காலத்தில் செல்லிப்பட்டு - பிள்ளை யார்குப்பம் படுகை அணை நிரம்பி வழிந்தது. இந்த அணையை கண்டுகளிக்க பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டதால் திடீர் சுற்றுலா இடமாகவும் மாறியது. மேலும், தண்ணீரை விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் படுகை அணையில் உள்ள தண்ணீர் தற்போது நீலம் மற்றும் பச்சை நிரமாக காணப்படுகிறது. மேலும்,தண்ணீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசி வருகிறது. படுகை அணையில் உள்ள மீன்களும் இறந்து மிதக்கின்றன. இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாதசூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘இப்பகுதியிலுள்ள தொழிற்சாலையின் கழிவுகள்ஆற்றில் திறந்து விடப்பட்டதால்,படுகை அணையில் தண்ணீரின் நிறம் மாறி மாசு ஏற்பட்டுள் ளது. இதனால் மீன்கள் இறந்துள்ளன.
இந்த தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் எங்களுக்கும் சில உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தவே அச்சமாக உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தண்ணீரில் உள்ள மாசு குறித்து உரிய விசாரணை நடத்தி இதற்கான காரணங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT