Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை

கோப்புப்படம்

திருவண்ணாமலை

தி.மலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை தினசரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கரோனா ஊரடங்கால் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்தாண்டு பங்குனி மாதம் முதல் தொடர்ந்து 11 மாதங்களாக தடை நீடிக்கிறது. சித்ரா பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு கூட பக்தர்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் கரோனா ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருவதால், பல்வேறு ஊர்களில் கோயில் விழாக்கள் நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல், பவுர்ணமி கிரிவலத்துக்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என சிவபக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பவுர்ணமி கிரிவலம் என்பது சிறப்பு வாய்ந்ததாகும். இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 மாதங்களாக கிரிவலம் செல்லவில்லை. கரோனா தொற்று குறைந்துள்ளதால், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பல ஊர்களில் நடைபெறும் கோயில் விழாக்களில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர்.

அதேபோல், குறைதீர்வு கூட்டங் கள் நடத்தப்படுகின்றன. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். சுற்றுலாத் தலங்களிலும் மக்களை காணமுடிகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. பொது இடங்களிலும் மக்களின் கூட்டம் வழக்கம்போல் உள்ளது. கிரிவலம் செல்லும்போது மனதள வில் அமைதி ஏற்படுகிறது. 14 கி.மீ.,தொலைவுக்கு நடந்து செல்லும் போது, உடலும் ஆரோக்கியம் பெறுகிறது. எனவே, பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு, வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு அனுமதி வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்" என்றனர்.

பவுர்ணமி கிரிவலத்தை நம்பிநூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகள் வாழ்கின்றனர். பக்தர்களின் மிதியடிகளை பாதுகாப்பது முதல் உணவு விற்பனை செய்வது வரை பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து சாலையோர வியாபாரிகள் பிழைத்து வருகின்றனர்.

கிரிவலம் தடைப்பட்டுள்ளதால், அவர்களது வாழ்வாதாரம் முடங்கிப் போனது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகள், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாசி மாதத்துக்கான பவுர்ணமி, வரும் 26-ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு தொடங்கி 27-ம் தேதி பிற்பகல் 2.42 மணி வரை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x