Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 110 மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், 70 முதல் 100 சதவீதம் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். தனியார் துறைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முழக்க மிட்டனர். ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் முன்பு அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், உடன்பாடு ஏற்படாததால் 110 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், செங்கம் மற்றும் ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூரில் நேற்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்க வளாகத்தில் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியேறும் போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சங்கரி முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டப் பொருளாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.
இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று 3 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT