Published : 23 Feb 2021 10:06 PM
Last Updated : 23 Feb 2021 10:06 PM
மணல் கடத்தல் வாகனங்களை விடுவிக்கக்கோரும் வழக்குகளை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மாடக்குளம் கண்மாய் அருகே கபாலீஸ்வரி மலைப்பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்து வந்த வயக்காட்டு சாமி மற்றும் லாரி ஓட்டுநரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
பின்னர் இருவரையும் சுப்பிரமணியபுரம் போலீஸார் கைது செய்தனர். மண் அள்ள பயன்படுத்திய வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை காவல்துறை இணையதளத்தில் பார்த்த போது, கபாலீஸ்வரி மலைப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய வானங்களை பறிமுதல் செய்ததாகவும், இருவர் தப்பியோடி விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனால் ஜனவரி 21-ம் தேதி சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யவும், குற்றவாளிகள் தப்பிக்க உடந்தையாக இருந்தவர்களை தப்பிக்கவிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், மணல் கடத்தல் வாகனங்களை விடுவிக்கக்கோரும் மனுக்களை அதற்கான சிறப்பு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது அந்த வழக்குகளை தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடுவது ஏன்? மணல் கடத்தல் வாகனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?
இனிமேல் மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பது தொடர்பான வழக்குகளை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அடுத்த விசாரணை மார்ச் 12-க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT