Published : 23 Feb 2021 08:06 PM
Last Updated : 23 Feb 2021 08:06 PM
பயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்கள் பட்டியலில் மதுரை விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்திய விமானத்துறை ஆணையம் (Indian Airport Authority) ஆண்டிற்கு இரு முறை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் சேவை எப்படியிருக்கிறது என்பது பற்றி சர்வே எடுக்கிறது.
அந்த அடிப்படையில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரையில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர் சேவை அடிப்படையில் பயணிகளுக்குப் பிடித்த விமானநிலையங்கள் பட்டியலில் மதுரை விமானநிலையம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தை உதய்பூர் விமான நிலையம் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பட்டாலும் அதில் 50 விமான நிலையங்களில் மட்டுமே இந்த சர்வேயை இந்திய விமானத்துறை ஆணையம் மேற்கொண்டது.
இதில், உதய்பூர் விமானநிலையம், 5-க்கு 4.85 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மதுரை விமான நிலையம் 4.80 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றது.
மதுரையைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர் சேவையில், விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு உதவுவது, டெர்மினலில் இருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்வது, பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் உடனுக்குடன் எந்ததெந்த நேரத்தில் புறப்படும் விமானங்கள், தரையிரங்கும் விமானங்கள் பற்றிய அறிவிப்புகளை செய்வது, கார் பார்க்கிங் போன்றவை அதிக புள்ளிகள் பெறுவதற்கு சாதகமாக இருந்தன.
ஆனால், உணவு வசதிகள், இண்டர்நெட் வசதி உள்ளிட்ட சில வசதிகள் புள்ளிகள் குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளன. எதிர்காலத்தில் இந்த குறைபாடுகளைப் போக்கி, விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தில் மதுரையின் சுற்றுலாத்தலங்கள் பற்றிய பற்றி வீடியோ கிளிப்பிங்கள், அதன் பராம்பரியம் உள்ளிட்டவற்றை ஒளிபரப்பவும், பயணிகளுக்கு உதவும் விமான நிலையப் பணியாளர்களை மதுரையின் கலாச்சார உடைகளில் உடுத்த வைப்பது போன்ற இன்னும் சிறப்பு அம்சங்களை ஏற்படுத்தி அடுத்த முறை முதலிடத்தைப் பெற வைப்போம் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT