Published : 23 Feb 2021 06:57 PM
Last Updated : 23 Feb 2021 06:57 PM

நீட் தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெறுக; கல்விச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை: அன்புமணி ராமதாஸ் 

நீட் தேர்வுக் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், கல்விச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு கோரியும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று பதிவு செய்துள்ள ட்வீட்டில், "மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வுக் கட்டணம் ஒபிசி/பொதுப் பிரிவினருக்கு ரூ.3750-லிருந்து ரூ.5015 ஆகவும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2750-லிருந்து ரூ 3835ஆகவும் உயர்த்தி தேசிய தேர்வுகள் வாரியம் (National Board of Examinations) ஆணையிட்டிருக்கிறது

ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே நடைபெறும் தேர்வுக்கான கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உயர்த்துவதும், ரூ.5015 கட்டணம் வசூலிப்பதும் நியாயமற்றது. இந்தக் கட்டண உயர்வை தேசிய தேர்வுகள் வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

நீட் தேர்வுக் கட்டணத்திற்கு ரூ.765 வரை (18%) ஜிஎஸ்டி வரியாக வசூலிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். கல்வி சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இன்று மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பாணை வெளியிட்டது தேசிய தேர்வுகள் ஆணையம்.

அந்த அறிவிப்பாணையில், பொது மற்றும் ஓபிசி பிரிவு தேர்வர்கள் 5015 ரூபாயும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 3835 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து கல்விச் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x