Published : 23 Feb 2021 06:38 PM
Last Updated : 23 Feb 2021 06:38 PM
காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "இரட்டை வேடம் போடும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளைப் வாபஸ் பெறுவதாக நாடகமாடுவது ஒருபுறம் என்றால், உரிமைக்காகப் போராடுவோரைக் கைது செய்து கொடுமைப்படுத்தும் படலம் இன்னொரு புறம் அரங்கேறுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியதாகும்.
உரிமைப்போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமடுக்காத அதிமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்திவையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பரவலாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்யே திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT