Published : 23 Feb 2021 06:22 PM
Last Updated : 23 Feb 2021 06:22 PM
மாநிலப் பேரிடர் நிவாரணம் மற்றும் மேலாண்மை நிதிக்கு, 15-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 1,360 கோடி ரூபாய் போதுமான அளவில் இல்லை என, இடைக்கால பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப். 23) கலைவாணர் அரங்கில், 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
"நிவர் மற்றும் 'புரெவி' ஆகிய இரண்டு புயல்கள் மற்றும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் தமிழ்நாடு தாக்கப்பட்டது. இதனால், பயிர்கள், உடைமைகள் மற்றும் பொதுச் சொத்துகள் பெருமளவில் சேதமடைந்தன. மொத்த சேதங்களை மதிப்பிட்டு, 'நிவர்' புயலால் ஏற்பட்ட சேதங்களுக்காக 3,758.65 கோடி ரூபாயும், 'புரெவி' புயலால் ஏற்பட்ட சேதங்களுக்காக 1,514 கோடி ரூபாயும், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பருவம் தவறிப் பெய்த கனமழை சேதங்களுக்காக 900.82 கோடி ரூபாயும் வழங்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகளுக்காக கணிசமான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020-21ஆம் ஆண்டின் மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து இதுவரை மொத்தம் 11 ஆயிரத்து 943.85 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடையிலிருந்து 200 கோடி ரூபாய் கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்கான செலவினங்களை மேற்கொள்வதற்காக, மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வாறு, மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அதிக அளவிலான செலவினங்கள், 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுகளுக்காக, மாநிலப் பேரிடர் நிவாரணம் மற்றும் மேலாண்மை நிதிக்கு, மத்திய அரசின் பங்கு 1,020 கோடி ரூபாயுடன், தமிழ்நாட்டுக்காக 15-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தொகையான 1,360 கோடி ரூபாய் உண்மையில் போதுமான அளவில் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
எனவே, தேசியப் பேரிடர் நிவாரணம் மற்றும் மேலாண்மை நிதியத்திலிருந்து தமிழ்நாட்டுக்குப் போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT