Published : 23 Feb 2021 04:22 PM
Last Updated : 23 Feb 2021 04:22 PM

வணிகர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிடில் தொடர் போராட்டம்: விக்கிரமராஜா பேச்சு 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு மற்றும் வியாபாரிகள்.

திருச்சி

தமிழகம் முழுவதும் வணிகர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில், தொடர் போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு பதிலாக உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, சாலை விரிவாக்கப் பணிகளால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி காட்டூரில் இன்று (பிப். 23) நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்று ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:

"திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைப்பதால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வணிகர்கள், சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, பால் பண்ணை முதல் துவாக்குடி வரையில் உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தால் வணிகர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க பேரமைப்பு துணை நிற்கும். தேவைப்பட்டால் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று போராடித் தீர்வு காணப்படும்.

இந்தப் பகுதியில் வணிகர்களின் வாக்கு மட்டும் ஒரு லட்சம் உள்ளது. வணிகர்களே அடுத்துவரும் சட்டப்பேரவை உறுப்பினர் யார் என்பதை முடிவு செய்யும் சக்தியாக உள்ளனர்.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றை இடித்து, வணிகர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதைக் கைவிட வேண்டும்.

தமிழகத்தில் வணிகர்களின் வாக்கு மட்டுமே ஒரு கோடி அளவுக்கு உள்ளது. ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்".

இவ்வாறு ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

போராட்டத்துக்குத் தலைமை வகித்த பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு பேசுகையில், "3-வது கட்டப் போராட்டத்துக்குப் பிறகாவது இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். தீர்வு ஏற்படாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம். ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைகளை அரசிடமே ஒப்படைப்போம். போராட்டங்களும் தீவிரப்படுத்தப்படும்.

பால் பண்ணை - துவாக்குடி இடையே 14.5 கிலோ மீட்டருக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வாக்குறுதியளிக்கும் வேட்பாளர் வெற்றி பெறப் பாடுபடுவோம்" என்றார்.

போராட்டத்தையொட்டி பால் பண்ணை முதல் துவாக்குடி வரையில் திருச்சி - தஞ்சாவூர் சாலையில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x