Published : 23 Feb 2021 03:55 PM
Last Updated : 23 Feb 2021 03:55 PM
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமனத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அரசு உரிய விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து, டிசம்பர் 30-ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “ஆணையத் தலைவர் தேர்வில் வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல், தகுதியானவர்களின் பெயர்களைப் பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் ஆஜராகி, “நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கவில்லை. வெளிப்படையான விளம்பரத்தை வெளியிடாமல் ஏற்கெனவே ஒருவரை முடிவு செய்தபின் தேர்வுக் குழுவைக் கூட்டியுள்ளனர். அந்தக் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் புறக்கணித்த நிலையிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலர் உள்ள நிலையில் 2 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்டவர் நியமிக்கப்பட்டுள்ளார்” என வாதிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்கக் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வழக்கு குறித்து பதில் மனுத்தாக்கல் செய்யவோ அல்லது நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை குறித்து விளக்கம் அளிக்கவோ உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT