Published : 23 Feb 2021 04:09 PM
Last Updated : 23 Feb 2021 04:09 PM
திருச்சி மாநகரில் நீண்டகாலமாகச் செயல்படுத்தப்படாமல் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும் எனத் திருச்சி மாநகரக் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்துக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.சக்திவேல், எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் சாலை, ஜீ கார்னர் சுரங்கப் பாதை ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ 10 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாமலேயே உள்ளன.
பால்பண்ணை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். வயலூர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும். அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மாநகர் முழுவதும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளால் சேதமடைந்துள்ள இடங்களில் விரைந்து புதிய சாலை அமைக்க வேண்டும். தெருநாய்கள் மற்றும் பன்றிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். மாநகரில் செல்லும் நீராதாரங்களில் சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
பல்லவன் ரயிலை மீண்டும் திருச்சியில் இருந்தே இயக்க வேண்டும். திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்காணும் கோரிக்கைகள் அனைத்தும் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றை விரைந்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் அடங்கிய கையேட்டை மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சியினருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்''.
இவ்வாறு எஸ்.சக்திவேல், எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தனர். பேட்டியின்போது நிர்வாகிகள் லெனின், நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT