Published : 23 Feb 2021 02:11 PM
Last Updated : 23 Feb 2021 02:11 PM
தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று இடைக்கால பட்ஜெட்டில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, 'கைதட்டுங்க அண்ணே' என்று கூறி, கைத்தட்டலைக் கேட்டு வாங்கிய சம்பவம் சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சட்டப்பேரவையின் கடைசி பட்ஜெட், ஓபிஎஸ் தாக்கல் செய்யும் 11-வது பட்ஜெட் மற்றும் 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். கலைவாணர் அரங்கில் இன்று (பிப். 23) காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டிருந்த ஓபிஎஸ் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை குறித்தும் அதற்கு ஒதுக்கியுள்ள நிதி விவரங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக ஓபிஎஸ் தெரிவித்தார். அப்போது ஓரிருவர் மட்டுமே தங்களின் கைகளைத் தட்டிக் கரவொலி எழுப்பினர்.
உடனடியாகத் தனது பேச்சை நிறுத்திய ஓபிஎஸ், 'கைதட்டுங்கண்ணே.. கைதட்டுங்கண்ணே.!' என்றார். உடனே சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கைகளை மேசையில் தட்டிக் கரவொலி எழுப்பினர். தொடர்ந்து ஓபிஎஸ் பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார்.
பட்ஜெட் உரைக்கு இடையே துணை முதல்வரே 'கைதட்டுங்க அண்ணே' என்று கேட்ட சம்பவம் சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT