Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
மத்திய அரசு சார்பில் மாநில பொருளாதார மேம்பாட்டுக்காக சென்னை- பெங்களூரு இடையே 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தால் தமிழகத்தில் 9 ஆயிரத்து 468 மரங்கள், 23 நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தொழில்காரிடார் திட்டத்தின் ஒரு அங்கமாக சென்னை - பெங்களூரு 6 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது.இது மத்திய அரசின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். இதனால் தொழில்துறை, சுற்றுலா மற்றும் விவசாயத் துறை ஆகியவை மேம்பட்டு, மாநில பொருளாதாரம் மேம்படும்.
இந்த சாலையால் வாகன இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவு குறையும். மேலும் சாலையின் மேல் பகுதியில் பாலங்கள் அமைப்பதால் தடங்கல் இல்லாமல் வாகனங்கள் செல்ல வழி வகுப்பதோடு, பயண நேரமும் குறையும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தச் சாலை பெங்களூரூ கிழக்கில் தொடங்கி சென்னையின் எல்லைப் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் முடிகிறது. இதன் மொத்த நீளம்262 கிமீ. தமிழகத்தில் வேலூர்,ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 106 கிமீ.க்கு சாலை அமைகிறது. இத்திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில், இத்திட்டத்துக்காக 1,085ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். இந்த சாலை பொன்னை, கொசஸ்தலை ஆறுகளின் குறுக்கேஅமைக்கப்பட உள்ளது. இத்திட்டப்பாதையில் 9 ஆயிரத்து 468 மரங்களும், 7 ஆயிரத்து 486 புதர்களும், 23 நீர்நிலைகளும் பாதிக்கப்படும். 5.42 ஹெக்டேர் பரப்பிலான சாலை,வனப்பகுதியில் வருகிறது. திட்டப்பகுதியில் சுற்றுச்சூழல் பராமரிப்புபணி ரூ.67 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு மரங்களையும், நீர்நிலைகளையும் அழித்து சாலை அமைப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர். இதனிடையே, இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் வரும் மார்ச் 13-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் அரசு தொடக்கப் பள்ளியிலும்,மார்ச் 16-ம் தேதி வேலூர் மாவட்டம்,காட்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமநாதபுரம் தொடக்கப் பள்ளியிலும் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT