Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

இணைய வழியில் மார்ச் 2-ல் கடல்சார் இந்தியா உச்சி மாநாடு; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்: 40 நாடுகளில் இருந்து 1 லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்பு­

சென்னை

மத்திய துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து துறை சார்பில், மார்ச் 2-ம் தேதி நடைபெறும் கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் பி.ரவீந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில், ‘கடல்சார் இந்தியா மெய்நிகர் உச்சி மாநாடு-2021’ வரும் மார்ச் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதில், உலகம் முழுவதும் 40 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த உச்சி மாநாட்டில், இந்தியகடல்சார் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்படும். அத்துடன், துறைமுகங்களின் வளர்ச்சி, நவீனமயமாக்கல், கப்பல் கட்டுமானம், பழுதுபார்த்தல், கடலோர கப்பல்போக்குவரத்து, பயண சுற்றுலா, கடல்சார் கல்வி உட்பட அனைத்து பிரிவுகளில் உள்ள முதலீடுவாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.

அத்துடன், இந்த உச்சிமாநாட்டில் சென்னை துறைமுகம் சார்பில் 15 ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன. இதில், பெரும்புதூர் அடுத்த மப்பேட்டில் ரூ.1,500 கோடியில் அமைய உள்ள பல்நோக்கு சரக்குப் பெட்டக பூங்கா, சென்னை - காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது, ஜோலார்பேட்டையில் ரூ.200 கோடியில் சரக்குப் பெட்டகம் கையாளும் முனையம், ரூ.60 கோடி முதலீட்டில் இந்தியக் கடற்படை உடன் இணைந்து சென்னை துறைமுகத்தில் கப்பல்களை மின்சாரத்தில் இயக்குவதற்கான வசதி உள்ளிட்டவை அடங்கும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா போன்ற கடலோர மாநிலங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று தங்களது மாநில விவரங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளன.

சென்னை துறைமுகத்தை இணைக்கும் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்துக்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.

சென்னை துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், செயலாளர் வி.ஆர்.மோகன் ராஜு ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x