Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக 850 துணை வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
புதிதாக உருவாக்கப்படவுள்ள துணை வாக்குச்சாவடிகளை இறுதி செய்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கூட்டம், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கரோனா நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் அனைத்து வாக்காளர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து சிரமமின்றி எளிதாக விரைந்து வாக்களிக்கும் வகையிலும் கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதி பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு வாக்குச்சாவடிக்கு 1500 வாக்காளர்கள் என இருந்ததை, தற்போது 1050 வாக்காளர்களுக்கு மிகாமல் இருந்தால் வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதுதொடர்பாக ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1050 வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகளை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரால் தணிக்கை செய்யப்பட்டது. துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கம், வாக்குச்சாவடிகள் இட மாற்றம் மற்றும் புதிய வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் குறித்த முன்மொழிவுகள் தயார் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, தாராபுரம் - 51, காங்கயம் - 78, அவிநாசி - 89, திருப்பூர் வடக்கு - 173, திருப்பூர் தெற்கு - 161, பல்லடம் - 141, உடுமலை- 87, மடத்துக்குளம் - 70 என மொத்தம் 850 துணை வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, துணை வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, தாராபுரம் சார் ஆட்சியர் பவண்குமார், கோட்டாட்சியர் (பொ) வாசுகி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கட்சியினர் கருத்து?
அரசியல் கட்சியினர் பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் விரைவாக வாக்குச்சாவடி பிரிப்பு பணிகளை நிறைவு செய்ய வேண்டும். விரைவில் இறுதி பட்டியல் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்தி வருவதால் பணிகள் பாதிக்கும். எனவே, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணிக்கு அழைக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT