Published : 31 Mar 2014 09:05 AM
Last Updated : 31 Mar 2014 09:05 AM

அழகிரிக்கு கட்டம் சரியில்லை: ஆரூடம் சொல்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்

மு.க.அழகிரிக்கு கட்டம் சரியில்லை என்று அவரைச் சந்தித்த பின் நிருபர்களிடம் கூறினார் நகைச்சுவை நடிகரும் பாஜக.வை சார்ந்தவருமான எஸ்.வி.சேகர்.

தி.மு.க.வில் இருந்து நீக்கப் பட்டுள்ள மு.க.அழகிரியை அரசி யல் தலைவர்களும், வேட்பாளர் களும் தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் ஞாயிற்றுக்கிழமை காலை எஸ்.வி.சேகரும் சந்தித்தார். காலை யில் அழகிரியின் வீட்டுக்கு வந்த அவர், அழகிரியுடனான சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் கூறியது:

மு.க.அழகிரி என் நண்பர். மதுரை வரும்போதெல்லாம் அவரை நான் சந்திப்பது வழக்கம். சிவகாசியில் இன்று எனது மோதி விளையாடு பாப்பா நாடகம் நடைபெறுகிறது. அதற்காக செல்லும் வழியில் அவரைச் சந்தித்து நட்புரீதியாகப் பேசினேன். அரசியலைத் தாண்டிய நட்பு இது. எனது, 3000-வது நாடகத்துக்கு ஜெயலலிதா வந்தார். 3500-வது நாடகத்துக்கு கலைஞரும், மூப்பனாரும் வந்தனர். 5001-வது நாடகத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார் என்றார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் எஸ்.வி.சேகர் கூறியதாவது:

அழகிரிக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தீர்களா?

நான் ஆறுதல் கூறுவதற்காக வரவில்லை. அவர்களுக்குள் சமர சம் செய்து வைக்கவும் வரவில்லை. இது அரசியல் சந்திப்பும் கிடை யாது. ஏப். 14-ம் தேதிக்குப் பிறகு எல்லாம் தானாகவே சரியாகி விடும்.

ஜோதிடர் போல சொல்கிறீர்களே?

வெயில் தாக்கம் குறைந்து விடும் என்று சொல்ல வந்தேன். நான் நிறைய பேருக்கு ஜோதிடம் சொல்லியிருக்கிறேன். கட்டம் சரியாக இருந்தால் யாரையும் கட்டம் கட்ட முடியாது. கட்டம் சரி யில்லை என்றால் யார் வேண்டு மானாலும் கட்டம் கட்டுவார்கள்.

அழகிரியை கட்சியில் இருந்து தானே நீக்கியிருக்கிறார்கள். கலை ஞரின் மகன், மு.க.ஸ்டாலின், கனி மொழியின் சகோதரர் என்ற உறவில் இருந்து அவரை நீக்க முடியாது. “பிளட் இஸ் திக்கர் தேன் வாட்டர்”.

நீங்கள் சார்ந்துள்ள பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?

‘மோடி பிரதமராக வரப்போ கிறார், ப.சிதம்பரம் நிதி அமைச்சர் பதவியை இழக்கப் போகிறார்’ என்றதும் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற ஆரம்பித்துவிட்டன. எனது நாடகத்தில் ஒரு காட்சி வரும். ‘தீவிரவாதத்தை ஒழிக்க என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்பார். ‘நிதி அமைச்சரை, உள்துறை அமைச்சராக்கப் போகி றோம்’ என்று பதில் சொல்வார் இன்னொருவர். ‘ஏன்?’ என்று அவர் கேட்க, ‘ஷேர் மார்க்கெட்டை அழித்து ஒழித்தவர் இவர். தீவிர வாதத்தை ஒழிக்க மாட்டாரா?’ என்று பதில் சொல்வார்கள். இது சிதம்பரத்துக்குப் பொருந்தும். மத்தியில் 300 தொகுதிகளுக்கு மேல் வென்று பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். தன் செயல் திறத்தால் தொடர்ந்து 3 முறை மோடியே பிரதமர் பதவியை வகிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

பேஸ்புக்கில் அழகிரி படம்!

நடிகர் எஸ்.வி.சேகர், மு.க.அழகிரியை சந்தித்த கையோடு, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். காலை 6 மணிக்கு நடிகை ஐஸ்வர்யாராயுடன் அவர் இருக்கும் படத்தைப் போட்ட அவர், மதியம் 1 மணிக்கு அழகிரியுடன் இருந்த புகைப்படத்தைப் போட்டார். ஐஸ்வர்யா ராய்க்கு இணையாக அழகிரியின் படமும் லைக் வாங்கியிருந்தது. நீங்களுமா? என்று பலர் அதிர்ச்சி கமெண்ட் போட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x