Published : 22 Feb 2021 05:47 PM
Last Updated : 22 Feb 2021 05:47 PM
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டது. இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார். இறந்த பெண்ணின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனா பேகம் (வயது 35). மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஹசீனா பேகம் நேற்று (பிப். 21) தனது வீட்டின் அருகில் உள்ள ஓடை பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.
அதிகாலையில் புதுச்சேரியில் பலத்த மழை பொழிந்ததால், இருசக்கர வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் எடுத்து விடுவதற்காக அவர் சென்றார். அப்போது, மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் ஹசீனா பேகம் அடித்துச் செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து வாய்க்காலில் குதித்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், அதற்குள் தண்ணீர் அவரை இழுத்துச் சென்றது.
இது பற்றி, கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கும், மேட்டுப்பாளையம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக இன்றும் (பிப். 22) தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மதியம் ஹசீனா பேகத்தின் உடல், கனகன் ஏரியில் கரை ஒதுங்கியது. உடனே போலீஸார், தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.4 லட்சம் கருணை தொகை
இது தொடர்பாக, துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த ஹசீனா பேகம் கனமழையால் வெள்ளவாரி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது மறைவால், அவரை பிரிந்து துயருற்று வாடும் அவரது கணவர், பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு கருணை தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT