

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன் என்று தயாநிதி மாறன் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுகவினர் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், திமுகவைச் சேர்ந்த எம்.பி. தயாநிதி மாறன், ராஜ கண்ணப்பன், மு.க.தமிழரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காஸ் சிலிண்டர்களுக்கு மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பேசிய எம்.பி. தயாநிதி மாறன், ''வட மாநிலங்களில் செய்ததைப் போல புதுச்சேரியிலும் மத்திய பாஜக அரசு ஆட்சியைக் கவிழ்த்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது ஏன்? இந்தியாவில் மட்டும் 1 லிட்டர் பெட்ரோலின் விலை 92 ரூபாயாக உள்ளது. விரைவில் 100 ரூபாயை எட்டிவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் மட்டுமல்ல, காஸ் சிலிண்டரின் விலையும் ஏறிக்கொண்டே உள்ளது. சிலிண்டருக்கான மானியத் தொகையும் குறைந்துவிட்டது. டீசல் விலையும் ஏறியுள்ளது. உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். அதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது'' என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.