Published : 22 Feb 2021 04:08 PM
Last Updated : 22 Feb 2021 04:08 PM
அதிமுக ஆட்சியை இயக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்காக, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுக திருச்சி மத்திய மாவட்டம், வடக்கு மாவட்டம் ஆகியன சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (பிப். 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர்கள் ந.தியாகராஜன் (வடக்கு), க.வைரமணி (மத்திய), எம்எல்ஏக்கள் அ.சவுந்திரபாண்டியன் (லால்குடி), எஸ்.ஸ்டாலின் குமார் (துறையூர்), மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏக்கள் பா.பரணிகுமார், அன்பில் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது:
"கடந்த 2 மாதங்களாக முதல்வர் கே.பழனிசாமி ஒவ்வொரு ஊராகச் சென்று, ஒவ்வொரு நாளும் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். முதலில் ரேஷன் கார்டுக்கு ரூ.2,500 வீதம் கொடுத்தார்.
வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபோது, அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் முதல்வர். இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்த பிறகு, ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். வேளாண் கடன் தள்ளுபடி உண்மையான விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
இதேபோல், கடந்த 9 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கண்டுகொள்ளாமல் தற்போது அந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அடுத்ததாக, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யலாமா என்றும், எதை எதைச் செய்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என்றும் ஆலோசித்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு, கல்வி ஆகிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதலில் அறிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் வாக்குறுதிகளைத்தான் முதல்வர் பழனிசாமி அறிவித்து வருகிறார். ஆட்சியில் இல்லையென்றாலும், அதிமுக ஆட்சியை இயக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழர்களைப் புறக்கணித்த அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும். திமுக ஆட்சியில் இருந்திருந்தால் தினந்தோறும் மத்திய அரசுடன் போராடி தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டியிருப்போம். வேளாண் சட்டம், நீட் தேர்வு எனத் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்துவிட்டனர். மத்திய அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்து செல்கிறது.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ள அதேவேளையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் காவிரி உபரி நீரைக் கொண்டு நிரப்புவதற்காக ரூ.380 கோடியில் வாய்க்கால் வெட்டும் பணியை அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால் கடைமடைக்குத் தண்ணீர் கிடைக்காது.
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் வீடில்லாத 1,500 பேருக்கு திமுக ஆட்சிக் காலத்தில்தான் பட்டா வழங்கப்பட்டது. அதன்பிறகு, இதுவரை வழங்கப்படவில்லை.
திமுக கூட்டணி பலமாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதுபோல் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதிமுகவில் திருச்சியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அமைச்சரவையில் உள்ள திருச்சி அமைச்சர்களால் எந்தத் திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை. திருச்சி மாவட்டத்தில் குடிநீர் வசதி, இலவச வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகள் மற்றும் விளையாட்டு அரங்குகள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய தொழிற்சாலைகள் வேண்டுமெனில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்.
கடைமடை விவசாயிகள் பாதுகாக்கப்படவும், மக்கள் வளம் பெறவும், ஏழை, எளிய மக்கள் பயன் பெறவும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என்று முதல்வர் பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே மாதம் கட்டாயம் பொறுப்பேற்பார்".
இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு இல்லை என்று நான் கூறவில்லை. கூட்டணியில் யாரைச் சேர்க்க வேண்டும், சேர்க்கக் கூடாது என்று முடிவு செய்ய வேண்டிய இடத்தில் கட்சித் தலைவர்தான் இருக்கிறார். கமல்ஹாசன் தூதுவிட்டாரா என்று எனக்குத் தெரியாது.
திமுக தேர்தல் வாக்குறுதியில் இணைப்பதற்காக கட்சியின் முன்னணியினர், மாவட்டச் செயலாளர்கள் தலைமைக்கு அளித்த கோரிக்கைகளை ஒற்றர்கள் வாயிலாகத் தெரிந்துகொண்டு, தாங்களே செய்வதாக முதல்வர் அறிவிக்கிறார்.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதற்காக, கருணாநிதி அரசு ஆரம்பக் கட்ட பணிகளைச் செய்தது. கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை திமுக ஆட்சியில்தான் கட்டப்பட்டது. வாய்க்காலுக்கு நிலம் கையகப்படுத்துவதற்குள் ஆட்சி முடிந்துவிட்டது. இந்தத் திட்டத்தை தேர்தல் ஆதாயத்துக்காகவே தற்போது தொடங்கி வைத்துள்ளனர்.
திமுகவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தனிக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்க தனிக் குழு எனப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன" என்று கே.என்.நேரு தெரிவித்தார்.
திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாட்டுவண்டி மீது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, அதற்கு மாலையிட்டிருந்தனர். கவிஞர் சல்மா, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT