Published : 22 Feb 2021 10:10 AM
Last Updated : 22 Feb 2021 10:10 AM
புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் நாராயணசாமி
முன்னதாக, புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 7 பேரும், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும், நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் அவைக்கு வந்துவிட்டனர். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 14 பேரும் அவைக்கு வருகை தந்தனர்.
சபாநாயகர் சிவக்கொழுந்து அவையைத் தொடக்கிவைத்தார். முன்னதாக நேற்றிரவு காங்கிரஸ் கட்சி தனது முடிவை சட்டப்பேரவையில் அறிவிக்கும் என நாராயணசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காலையில் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், கிரண் பேடியின் போட்டி அரசியல், மத்திய அரசின் கெடுபிடி ஆகியனவற்றுக்கு மத்தியிலும் புதுச்சேரி அரசு 4 ஆண்டுகளாக சிறப்பாக மக்கள் பணியாற்றுவதாகக் கூறினார்.
அவையில் அவர் பேசுகையில், "சோனியாகாந்தி, ஸ்டாலின் ஆதரவால் நான் முதல்வரானேன். நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் மக்கள் எனக்கு அளித்தனர்.
அதன் பின்னர் புதுவை துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார். அவருடைய பதவியேற்புக்குப் பின் ஆட்சிக்கு அன்றாடம் தொல்லை ஏற்பட்டது. கிரண்பேடி மூலம் அரசுக்கு மத்திய பாஜக தடைகளை ஏற்படுத்தியது. புதுச்சேரி எதிர்கட்சிகளும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் கொடுத்த மாநிலம் என்ற பெருமையை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களுக்காக சேவை ஆற்றினர். கரோனா நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவில்லை. மத்திய அரசு மாநிலங்களுக்கு 41% நிதி தருகிறது. ஆனால், புதுச்சேரி பிரதேசத்துக்கு 20% நிதி தான் கிடைத்தது. மோடி அரசு புதுச்சேரி அரசை தொடர்ந்து புறக்கணிக்கிறது
இக்கட்டான காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி போட கோப்பு அனுப்பிய நிலையில் அது ஆளுநர் மாளிகையில் தூங்குகிறது. கோப்பு காலதாமதம் அதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தினார்கள்.
ஆளுநர், தலைமைச் செயலர், டிஜிபி நியமனங்கள் பற்றி மாநில அரசிடம் ஆலோசிக்கப்படவில்லை. இது, ஜனநாயக நாடு. பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாமா?
புதுச்சேரி மழைக் காலங்களில் ஆய்வு செய்தேன். ஆனால், அதையும் திட்டமிட்டு களங்கம் செய்தனர்.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.100 ஆக்கியது தான் பாஜக சாதனை. இந்தியாவை அடமானம் வைக்கிறது மத்திய அரசு. எப்பதவியும் நிரந்தரம் இல்லை. சிவலோக பதவி மட்டுமே நிரந்தரம்” என்றார்.
காங்கிரஸின் பலம் என்ன?
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காங்கிரஸில் 15, திமுகவில் 3, சுயேட்சை எம்எல்ஏ என 19 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸிலிருந்து தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான்குமார், லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 9 ஆனது. தொடர்ந்து, திமுக எம்எல்ஏவான வெங்கடேசனும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இன்று சட்டப்பேரவையில் ஆளும்கட்சி பெரும்பான்மையை நிருபிக்க வாக்கெடுப்பு நடக்க உள்ள சூழலில் காங்கிரஸ் கூட்டணியில் வரிசையாக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் எம்எல்ஏக்கள் விலகல் பற்றி தெரிவித்திருந்த சூழலில் இந்த ராஜினாமாக்கள் நடந்துள்ளது. அடுத்தடுத்த திருப்பதால் காங்கிரஸ் தவிப்பில் உள்ளது. இச்சூழலில் காங்கிரஸ்-திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. அதன்படி இன்று காலை முடிவு எடுக்கப்பட உள்ளது.
தற்போது ஆளுங்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 9, திமுக-2, சுயேட்சை 1 என 12 பேரே உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்7, அதிமுக 4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக)-3 என 14 பேர் உள்ளனர்.
நியமன எம்எல்ஏக்களுக்கு பேரவையில் அனுமதி
புதுவை சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ள கோணத்தில் அணுக காங்கிரஸ் கூட்டணி திட்டமிட்டது. இதனால், சட்டப்பேரவையில் நடைபெறும் பலப்பரீட்சையில் நியமன எம்எல்ஏக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருக்கைகள் மாற்றம்:
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் விலகலுக்கு பிறகு சட்டப்பேரவையில் இருக்கைகளை மாற்றி அமைத்து சட்டப்பேரவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் எதிர்கட்சி வரிசையின் இறுதியில் நியமன பாஜக எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வணபதி, தங்கவிக்ரமனுக்கு அடுத்தடுத்த இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்க வருமாறு சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமி எஸ்எம்எஸ் மூலம் அழைப்பும் விடுத்துள்ளார். சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து கடிதமும் அனுப்பபட்டுள்ளது. அதோடு சட்டசபை அலுவல் பட்டியலில் ஒரே ஒரு அலுவலாக நம்பிக்கை கோரும் பிரேரனை மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதிலும், விவாதம்என இடம் பெறவில்லை. இதனால், சபையில் விவாதமின்றி நேரடியாக வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிகிறது.
இருப்பினும், சட்டப்பேரவையை பொருத்தவரையில் சபாநாயகரின் முடிவே இறுதியானது ஆகும். புதுவையில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் திருப்பங்கள், ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பலப்பரீட்சை ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் அரசு தப்புமா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT