Published : 22 Feb 2021 09:39 AM
Last Updated : 22 Feb 2021 09:39 AM
புதுச்சேரியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் பாலன், காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் தொடர் ராஜினாமாவால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சமபலமாக இருக்கும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி இல்லத்துக்கு இன்று காலை துணை சபாநாயகர் பாலன் வருகை தந்தார். அவருடன் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கமும் வந்தார். முதல்வர் இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
காலை 10 மணிக்கு புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் துணை சபாநாயக ஆலோசனை அரசியல் முக்கியத்துவம் பெருகிறது.
புதுவை காங்கிரஸ் அரசுக்கு திமுக, சுயேச்சை எம்எல்ஏ ஆதரவோடு 19 எம்எல்ஏக்களின் பலம் இருந்தது. புதுச்சேரி காங்கிரஸ் அரசில் இருந்து 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். அதோடு பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பேரவையில் தலா14 என சம பலம் இருந்தது.மேலும், மொத்தமுள்ள 28எம்எல்ஏக்களில் 15 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே பெரும்பான்மை கிடைக்கும். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறி தார்மீக அடிப்படையில் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மேலும், எதிர்க்கட்சிகளின் 14 எம்எல்ஏக்களும் ஒருங்கிணைந்து கையெழுத்திட்டு சட்டப்பேரவையை கூட்டி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் மனு அளித்தனர். இதனையடுத்து ஆளுநர் உத்தரவின்பேரில் இன்று (பிப். 22) காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது.
தற்போதைய நிலையில் ஆளுங்கட்சி கூட்டணியில் காங்கிரஸ்-9, திமுக-2, சுயேச்சை-1 என 12 எம்எல்ஏக்களே உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ்-7, அதிமுக- 4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக)- 3 என 14 பேர் உள்ளனர்.
முன்னதாக, நேற்று (ஞாயிறு இரவு) புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், " காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை கடிதம் தந்துள்ளார். காலை பத்து மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. இதில் கூட்டணி கட்சிகள் எந்த நிலை எடுக்க வேண்டும் என ஆலோசித்தோம். கருத்துக்களை கேட்டறிந்தோம். பல கருத்துகள் வந்தன. சட்டமன்றம் கூடும்போதுதான் எந்த நிலையை எடுப்பது என முடிவு செய்வோம். தற்போதைய பேச்சுவார்த்தையில் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் எங்கள் முடிவை தெரிவிப்போம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT