Published : 21 Feb 2021 07:25 PM
Last Updated : 21 Feb 2021 07:25 PM
புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் அடித்து செல்லப்பட்ட பெண் மாயமாகியுள்ளார்.
புதுச்சேரி சண்முகாபுரம் அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனா பேகம்(35). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஹசீனா பேகம் அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சண்முகாபுரம் ஓடை பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் இருசக்கர வாகனத்தை ஓடையை ஒட்டிய பகுதியில் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். அதுபோல் ஹசீனா பேகம் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை ஓடையை ஒட்டிய வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கியுள்ளார்.
இன்று(பிப்.21) காலையில் எழுந்தபோது கனமழை காரணமாக ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஹசீனா பேகம் தனது பைக்கை எடுக்க சென்றுள்ளார். அவர் இருசக்கர வாகனத்தை தள்ள முயன்ற நிலையில், தண்ணீர் வேகம் காரணமாக இருசக்கர வாகனம் இழுத்து செல்லப்பட்டது. அதனை பிடிக்க முற்பட்டபோது, தடுமாறி விழுந்த ஹசீனா பேகத்தை வெள்ளநீர் அடித்து சென்றது.
அவரது கூச்சல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடையில் குதித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவரை வெள்ளநீர் இழுத்து சென்றதில் மாயமானார். உடனே இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம், கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மேட்டுப்பாளையம் போலீஸார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஹசீனா பேகத்தை ஓடையில் இறங்கி தேடினர்.
நீண்ட நேர தேடலுக்கு பிறகு ஹசீனா பேகத்தின் இருசக்கர வாகனம் மட்டும் மீட்கப்பட்டது. ஆனால் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்று வெள்ள நீரில் சிக்கிய பெண் மாயமானது அப்பகுதியில் சோத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT