Published : 21 Feb 2021 04:21 PM
Last Updated : 21 Feb 2021 04:21 PM

அத்திக்கடவு – அவிநாசித் திட்டம் திமுக ஆட்சியில் விரிவுபடுத்தப்படும்: ஸ்டாலின் பேச்சு

சென்னை

தி.மு.க. அரசால் தொடங்கப்பட்டு, அ.தி.மு.க. அரசால் அரைகுறையாக செயல்படுத்தப்பட்டு வரும் அத்திக்கடவு – அவிநாசித் திட்டம் திமுக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும் முழுமையாகப் பயன்படும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுச் செயல்படுத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ரோடு – ராக்கியாபாளையம் பிரிவு அருகில் நடைபெற்ற, திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

திவ்யா என்ற திருநங்கையின் கோரிக்கைக்குப் பதிலளித்துக் ஸ்டாலின் கூறியதாவது:

திருப்பூர் வடக்கு தொகுதியைச் சார்ந்த திவ்யா அவர்கள் சொன்ன கருத்துக்களை நீங்கள் கேட்டீர்கள். திருநங்களான எங்களுக்கு வாடகைக்கு இடம் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று சகோதரி சொன்னார். இந்தியாவில் முதன்முதலில் ஒரு திருநங்கை உள்ளாட்சி பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தி.மு.க. கட்சியில்தான். திருச்செங்கோட்டில் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அதே போல தான் முதன்முதலில் திருநங்கைகளுக்கு தனி வாரியம் அமைத்தது கலைஞர்தான். அதே கலைஞர் அறிவித்த ஏப்ரல் 15ஆம் தேதி தான் தமிழகத்தில் திருநங்கைகளின் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புடைய தி.மு.க. ஆட்சியில் நீங்கள் இப்போது சொன்ன வீட்டுப் பிரச்சினையும் நிச்சயமாக வரவிருக்கும் தி.மு.க. ஆட்சி களையப்பட்டு அதை மனதில் வைத்துக்கொண்டு திட்டங்கள் தீட்டப்படும் என்ற நம்பிக்கையை திவ்யா அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

மனோகரன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

அவர் பதட்டமாக இருக்கிறார். அதனால் பேச முடியாததால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வாறு இருந்தாலும் அவர் மனு கொடுத்திருக்கிறார். மனுவில் அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார். மனோகரனுடைய தாயார் மன நலம் பாதிக்கப்பட்டார். அவருடன் கூட பிறந்தவர்களும் இறந்து விட்டார்கள். அவருக்கு சேர வேண்டிய நிலத்தை சுகுமார் என்கிற அ.தி.மு.க. கவுன்சிலர் அபகரித்து விட்டார். அதை அவருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் பெயரில் பதிவு செய்து விட்டார். எத்தனை முறை புகார் செய்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனோகரன் அவர்கள், அவர் மனுவில் தெரிவித்திருக்கிறார். நிச்சயமாக நம் ஆட்சியில் உங்கள் நிலம் உங்களுக்கு மீட்டுத் தரப்படும். 3 மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள். இதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்ற போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கிடையில் அ.தி.மு.க. கவுன்சிலருக்காக பயப்படாதீர்கள். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். தி.மு.க. இருக்கிறது என்று நம்பிக்கையோடு இருங்கள். 100 நாட்களில் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என்பதுதான் இந்தத் திட்டத்தையே நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ஆனால் போறபோக்கை பார்த்தால் ரவுடித்தனம் செய்கின்ற அ.தி.மு.க.வினர் மீதான புகார்களை கேட்கவே தனியாக ஒரு சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என்ற மாதிரியான ஒரு சூழலில் இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாள் தான் இந்த ஆட்டம் எல்லாம் ஆடப் போகிறார்கள் 3 மாதம் தான். ‘பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்’ என்று சொல்வதுபோல, நிச்சயமாக பொறுத்தது போதும். நாம் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுப்போம். எனவே இந்தத் பெட்டிகளில் இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று புரியவில்லை. இப்போது சொன்னதை பார்த்தால் இதே போல பல மாவட்டங்களில், பல ஊர்களில் ஆளுங்கட்சி செய்யும் அக்கிரமங்கள், அராஜகங்கள் எல்லாம் அடங்கிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கென ஒரு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று சூழ்நிலை இருக்கிறது. எனவே மனோகரன் அவர்கள் சொன்ன கோரிக்கைகள் குறித்து நான் மனதில் வைத்துக்கொண்டு, உரியை நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாத்திமா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளுக்காக ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் மேற்கொண்ட சில கால்வாய் பணிகளால் இவர்கள் வீட்டை இடித்திருக்கிறார்கள். அதனால் வீடெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றிய புகார் செய்தபோது அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்லுகிறார்கள். 2 சின்ன பசங்களை வைத்துக் கொண்டு வீடு எப்போது இடிந்து தலையில் விழும் என்ற பயத்தில் இரவு தூக்கம் தொலைந்து விட்டது என்ற பாத்திமா அவர்கள் மனுவாக எழுதி கொடுத்து இருக்கிறார்.

எப்படி அண்ணா தி.மு.க. என்ற கட்சி பெயரில் மட்டும் அண்ணாவை வைத்துக் கொண்டு அவர் கொள்கைக்கு எதிராக அ.தி.மு.க. செயல் படுகிறதோ, அதுபோல ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் மட்டும்தான் ‘ஸ்மார்ட்’ இருக்கிறது. மற்றபடி இது கரெப்சனுக்காக மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா ஊர்களிலும் இதுதான் நிலை. நச்சுப் பாம்பிற்கு நல்ல பாம்பு என்று பெயர் வைத்தது போல, இந்த ஆட்சியில் ஊழல் திட்டத்திற்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் உண்மை. எனவே எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன்பு அதில் யாரெல்லாம் பாதிப்படைகிறார்கள் என்று யோசித்து, அவர்களது குறைகளுக்கு செவி சாய்ப்பதுதான் ஒரு நல்ல அரசாங்கமாக இருக்க முடியும். எனவே அதிகாரிகளுடன் பேசி உங்களது வீட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தீர்வுகாண நிச்சயமாக கழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை நம்முடைய பாத்திமா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிவக்குமார் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் ஸ்டாலின் கூறியதாவது:

கேத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ஹரி கோபால். அவருடைய அட்டூழியத்தை பற்றி சிவக்குமார் அவர்கள் இங்கே சொல்லி இருக்கிறார். இங்கே வந்து புகார் கொடுத்ததால், தனக்கு ஆபத்து வரும் என்று அவர் சொல்லியிருக்கிறார். நீங்கள் கவலைப்படாதீர்கள் இந்த நிகழ்ச்சியை எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். காவல்துறையும் பார்த்திருக்கிறது. அரசு அதிகாரிகளும் பார்த்திருக்கிறார்கள். ஆட்சியாளர்களும் பார்த்திருக்கிறார்கள். மக்களும் பார்த்திருக்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம். தி.மு.க. உங்களுக்கு நிச்சயமாக பக்கபலமாக இருக்கும். நீங்கள் கவலைப்படாதீர்கள். ஒரு நாளைக்கு பல்லாயிரம் லிட்டர் தண்ணீரை தன் வயலுக்கு திருப்பி விடுவதாக புகார் சொல்லி இருக்கிறார், சிவகுமார் அவர்கள். இதனால் மற்ற பகுதிகளில் வரண்டு போகிறது. ஊர் மக்களை மிரட்டும் வகையில் அ.தி.மு.க.வைச் சார்ந்த சித்ரா ஹரி கோபால் ஈடுபடுகிறார். பொறுப்புணர்ந்து செயல்படுபவர்கள் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும். தவறானவர் கைகளுக்கு அதிகாரம் போனால் இப்படித்தான் நடக்கும். கூடிய விரைவில் அந்த அடாவடித்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த உள்ளாட்சிப் பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிச்சயம் சிக்குவார்கள். கவலைப்படாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். சிவக்குமார் அவர்களே. தைரியமாக இருங்கள்.

மணிகண்டன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் அவர் கூறியதாவது:

ஏழை - எளிய குடும்பத்தில் பிறந்து மாநில அளவில் ‘ஊஷு’ தற்காப்புக் கலையில் சாதனை படைத்திருக்கிறார். இந்த மணிகண்டன் மகன் குருஜி. அதற்காக உள்ளபடியே என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்த கூட்டத்தில் இருப்பவர்களும் அந்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவருடைய பயிற்சிக்கு நாம் உதவவேண்டும் என்று கோரியிருக்கிறார். பல இடங்களில் திறமையான இளைஞர்கள், சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் தி.மு.க. உதவி செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக உங்களுக்கும் நாங்கள் உதவி செய்வோம். இதற்கு 100 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் முன்கூட்டியே உங்களுக்கு அந்த உதவிகள் தேடி வரும் என்பதை நான் இங்கே உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தங்கவேல் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் அவர் கூறியதாவது:

இப்போது அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திடீர் திடீரென்று புதிய புதிய அறிவிப்புகளை எல்லாம் முதலமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா? முதலில் சொல்லுங்கள். அதாவது அவர்களுக்கு ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று நன்றாக தெரியும். வரப்போவதில்லை என்று தெரிந்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்கிறார். நான் கேட்கிறேன், 10 வருடங்களாக இவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள்.

10 வருடங்கள் ஏன் அதைச் செய்யவில்லை. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதை உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கிய ஆட்சி தான் இப்போது இருக்கும் ஆட்சி. இப்போது தேர்தல் வருகின்ற காரணத்தினால் மக்களை ஏமாற்றுவதற்காக அவர் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். கவலைப்படாதீர்கள். அதை தி.மு.க. தான் செய்யப்போகிறது. இப்போது தங்கவேல் அவர்கள் சொன்னது போல நிச்சயமாக அதெல்லாம் பரிசீலிக்கப்பட்டு அதில் என்னென்ன குறைகள் இருக்கிறதோ, யார் யார் விடுபட்டு இருக்கிறார்களோ, விடுபடாத சூழ்நிலையை நிச்சயமாக திமுக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். கவலைப்படாதீர்கள். எந்த நம்பிக்கையோடு சொன்னீர்களோ, அந்த நம்பிக்கையை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப்பிறது காப்பாற்றும் என்பதை நம்பிக்கையோடு சொல்கிறேன்.

சபரீசன் என்ற மாற்றுத் திறனாளியின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக அவருக்கு ‘எலக்ட்ரிகள் வீல்சேர்’ வழங்கப்படும் எனத் தெரிவித்து, அவர் கூறியதாவது:

சகோதரர் சபரீசன் அவர்களே, கவலைப்படாதீர்கள். நீங்கள் ஒரு மாற்றுத்திறனாளி. ‘ஊனமுற்றோர்’ என்ற அழைக்கப்பட்ட பெயரையே மாற்றியவர் கருணாநிதி. உங்களை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பெயரை மாற்றினார். ஏனென்றால் ‘ஊனமுற்றோர்’ என்று சொல்லி அவர்கள் மனதை புன்படுத்தக் கூடாது என்று சொல்லி பெயரை மாற்றினார். அவருடைய மகன் ஸ்டாலினிடம் சொல்லி இருக்கிறீர்கள். கவலைப்படாதீர்கள். மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் அவர்களிடம் சொல்லிவிட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். ஓரிரு நாட்களில் நீங்கள் கேட்ட அந்த எலக்ட்ரிக்கல் வீல்சேர் வந்துசேரும்.

சுகுமார் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கூறியதாவது:

அவிநாசி என்பது சாதாரண எம்.எல்.ஏ. தொகுதி மட்டமல்ல. சபாநாயகராக இருக்கின்றவரது தொகுதி. அமைச்சரிடம் சொல்லி, ஆட்சி பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளிடம் சொல்லி உடனுக்குடன் செய்து கொடுக்கும் சக்தி அவருக்கு உண்டு. ஆனால் சபாநாயகராக இருந்தும் அவரால் செய்ய முடியவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது. இப்போது கூட கேள்விப்பட்டேன், அவர் இப்போது வரவிருக்கும் தேர்தலில் தொகுதி மாறுகின்ற முடிவோடு இருக்கிறாராம். ஏனென்றால் இந்த தொகுதியில் நின்றால் டெபாசிட் வருமா என்று ஒரு சந்தேகம் அவருக்கே வந்திருக்கிறது. அதனால் தான் தொகுதியைப் பற்றி கவலைப்படாமல் இருந்து கொண்டிருக்கிறார்.

இப்படி பல அமைச்சர்கள் தொகுதி மாறுவதற்கான திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. சுகுமார் அன்னூர் மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்று கூறியுள்ளார். 1 லட்சம் பேர் நம்பி இருக்கும் இந்த மருத்துவமனை வெறும் கிளினிக் அளவில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது புதிதாக கிளினிக் திறந்து கொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கு தெரியும். அதற்கு நர்ஸ் இல்லை. டாக்டர் இல்லை. மருந்து இல்லை. பழைய பில்டிங்டிற்கு பச்சை பெயிண்ட் அடித்து, புது கிளினிக் என்று திறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள்? அதை யார் நியமனம் செய்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது. அதில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்னூர் மருத்துவமனையை உண்மையான மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான வேலையை நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு செய்யும். அதுமட்டுமில்லாமல் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் அங்கு உறுதியாக நம் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வின் நிறைவில் ஸ்டாலின் பேசியதாவது:

தியாகத்தின் அடையாளமாகப் போற்றப்படுகின்ற திருப்பூர் குமரன் பிறந்த மண்ணில் - திராவிட இயக்கத்தின் பிதாமகர்களான தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முதன்முதலாக சந்தித்த மண்ணில் - வந்தாரை வாழவைக்கும் கருணை நகரமான திருப்பூருக்கு வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமை அடைகிறேன்!

விவசாயிகள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள் - அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் - சிறுகுறு தொழில் செய்வோர்- ஏழைகள் - ஒடுக்கப்பட்டோர் - பட்டியலினத்தவர் - பழங்குடிகள் - பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் - ஆதரவற்றோர் - அபலைகள் - முதியோர் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள்- திருநங்கையர் - சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் - புறம்தள்ளப்பட்டவர்கள் - ஆகியோரின் மேம்பாட்டுக்கு உழைக்கின்ற இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குறுதியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இந்தப் பந்தலுக்குள் கூடியிருக்கிறீர்கள்!

''வீட்டில் நான்கு குழந்தை இருந்தால் மெலிந்த குழந்தை மீதுதான் பெற்றோருக்கு அன்பு இருக்கும். அதைப் போலத்தான் மெலிந்த குழந்தைகளை முன்னேற்ற நினைக்கிறேன்" - என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான், 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்ற இந்த வாக்குறுதி ஆகும்!

வெற்றி பெற்று - பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மேடையிலேயே வாக்குறுதியை நிறைவேற்றிய கலைஞரின் மகன் நான். கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றிப் பழக்கம் இல்லாதவர் பழனிசாமி. அதனால் தான் ஊர் ஊராகப் போய் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார் ஸ்டாலின் என்று சொல்லி இருக்கிறார். இப்படி குற்றம் சாட்டுவதற்கு முன்னால், தான் எந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம் என்பதை பழனிசாமி சொல்ல வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால் தானே சொல்வார்கள். ஆட்சி முடியப் போகிறது.

கடைசி நேரத்தில் கல்வெட்டுகளை திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. ஒரு ஆட்சி தொடங்கும் போது நல்ல திட்டங்களை தொடங்க வேண்டும். ஆட்சி முடிவதற்குள் அதனை திறந்து வைக்க வேண்டும். ஆனால் பழனிசாமி, பின்னால் நடந்து போகிறார்.நான்காண்டு காலம் சும்மா கால் ஆட்டிக் கொண்டு இருந்துவிட்டு ஆட்சி முடியும் போது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆட்சி முடியும் போது காற்றில் கயிறு திரிக்கிறார்.

லட்சம் கோடி திட்டம் கொண்டு வருவாராம், லட்சக்கணக்கானவர்க்கு வேலை கொடுப்பாராம். அவர் முதல் மந்திரி பழனிசாமியா? மந்திரவாதி பழனிசாமியா எனத் தெரியவில்லை.

அதிமுக அரசு உருவானது முதல் சொல்லப்பட்ட அனைத்தும் வாய்ஜாலம் தான்!

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு “விஷன்-2023” என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். 2012 ஆம் ஆண்டு அந்த புதிய கொள்கையை வெளியிட்டார். அதை இப்போது படித்தாலும் புல்லரிக்கிறது. தனிநபர் வருமானத்தை உயர்த்துவேன், 15 லட்சம் கோடிக்கு உள்கட்டமைப்பு திட்டங்கள். 2 கோடி பேருக்கு வேலைகள், தமிழ்நாட்டில் இரண்டு மருத்துவ நகரங்கள் உருவாக்கப்படும். கோயம்புத்தூர்- மதுரை, கோயம்புத்தூர்- சேலம் இன்டஸ்ட்ரியல் காரிடார் அமைக்கப்படும். இதில் எதுவுமே இந்த 9 வருடங்களில் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை!

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ல் ஜெயலலிதா நடத்தினார். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவித்தார். 2.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்றார் 4.69 லட்சம் போருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்றார். இந்த மாநாடு பற்றி இதுவரை வெள்ளை அறிக்கை தரவில்லை!

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பழனிச்சாமி நடத்தினார். 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொன்னார். 3 லட்சத்து 431 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகச் சொன்னார். 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை!

முதலமைச்சர் பழனிச்சாமி 13 நாள் வெளிநாட்டு சுற்றுலா போனார். 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகச் சொன்னார். 8 ஆயிரத்து 835 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றார் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். முதலீடும் இல்லை. வேலையும் இல்லை.

கரோனா காலத்தில் 101 புரிந்துணர்வு போட்டு விட்டதாகச் சொன்னார். 88 ஆயிரத்து 727 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என்றார். ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கப் போகிறது என்றார். இதுவும் தோல்வி. தோல்வி. தோல்வி.

இப்போது புதிய தொழிற்கொள்கை - 2021 என்று வெளியிட்டுள்ளார். 10 லட்சம் கோடி முதலீடு திரட்டப் போகிறாராம். 20 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கப் போகிறாராம். இந்த கொள்கையை அறிவித்து விட்டு பேசிய பழனிச்சாமி, “முதலீடுகளை ஈர்க்கும் சரணாலயமாக தமிழ்நாடு திகழ்கிறது” என்று அண்டப் புளுகை – ஆகாசப் புளுகை கூறியிருக்கிறார். ஆனால் உண்மை என்ன? ஊழலின் சரணாலயமாக தமிழ்நாட்டை மாற்றி விட்டார் பழனிச்சாமி.

அடுத்து, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஏதோ தங்களது சாதனையைப் போல பழனிசாமி அரசு சொல்கிறது. இது இவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் அல்ல!

1972 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொள்கை ரீதியாக ஏற்கப்பட்ட திட்டம் தான் அத்திக்கடவு அவிநாசி திட்டம். அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை. 1990-ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்கள் அதனை செயல்படுத்தும் முயற்சி எடுத்தபோது, ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை.

1996-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தின் முதல் கட்டமாக கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அடுத்தகட்டப்பணிகளைச் செய்யவில்லை.

2006-ஆம் ஆண்டு அத்திக்கடவு பேஸ் 2 திட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார். கோவை முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உலக வங்கி, நபார்டு, ஜப்பான் வங்கி ஆகியவை கடன் தர முன்வந்தன. ஆட்சி மாறியது. அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை.

அத்திக்கடவு குடிநீர் விநியோகத்தையே முடக்கிவிட்டார்கள். 2012-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. ஆனாலும் அதிமுக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை.

நிலத்தை கையகப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. நீதிபதிகள் அதிமுக ஆட்சிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். திமுக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. சட்டப்பேரவையில் நான் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றேன். இவ்வளவும் நடந்த பிறகு வேறு வழியில்லாமல் இந்த ஆட்சி அறிவித்தது. எனவே, அத்திக்கடவு கனவை தான் நிறைவேற்றியதாக பழனிசாமி, இந்த வட்டாரத்தை ஏய்த்துக் கொண்டு இருக்கிறாரே தவிர அது உண்மையல்ல!

இப்போது இவர்களால் அறிவித்து செயல்படுத்தி வருவதும் அரைகுறையான திட்டம் தான். முழுமையானது அல்ல. கழக ஆட்சி மலர்ந்ததும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு முழு பலன் தரும் திட்டமாக விரிவுபடுத்தி நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை இந்தக் கூட்டத்தில் வழங்குகிறேன்.

“துறைகள் தோறும் புதிய உயரங்கள் பல தொட்டு - தமிழ்நாட்டின் வெற்றி நடை தொடர வேண்டும்” என்று பழனிசாமி கூறியிருக்கிறார். பொய் சொல்வதில்- பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் - அந்த அளவிற்கு பொய்யராக மாறிவிட்டார்.

ஒவ்வொரு அரசு துறையையும் சீரழித்து - இன்றைக்கு ஒட்டு மொத்த தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பையே உருக்குலைத்து விட்டார் பழனிச்சாமி. இன்றுவரை முதலீடுகள் பெற்றது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வக்கற்றவர் பழனிசாமி. சட்டமன்றத்தில் கூட வைக்க முடியாமல் தவித்து நிற்பவர் பழனிசாமி.

இந்த லட்சணத்தில் அதிமுக அரசு வெற்றி நடை போடுகிறதாம். அதுவும் உங்கள் பணத்தை செலவழித்து பிரச்சாரம் செய்கிறார்.

நான் சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாடு வெத்து நடை போடுகிறது. பழனிசாமியின் வெத்து நடை தமிழ்நாட்டிற்கு தேவையில்லை! என்று இந்த தமிழகம் பதிலடி கொடுக்கத் தயாராகி விட்டது.

இலட்சம் கோடியில் புதிய தொழில்களை உருவாக்க வேண்டாம். ஏற்கனவே இருக்கும் தொழில்களையாவது காப்பாற்றினார்களா என்றால் இல்லை!

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கின்ற மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகாலமாக, அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டு காலமாக பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், சிறுகுறு நிறுவனங்களாக இருந்தாலும் அவை செயல்பட முடியாமல் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி வருகிறது. அதற்கு மத்திய பாஜக அரசும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசும் தான் முழுமுதற் காரணம்.

தொழில் வளர்ச்சியில், பின்னலாடை உற்பத்தியில், பருத்தி நூல் உற்பத்தியில், துணிகள் ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் தலைசிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டமானது பின் தங்கியதற்கு இவர்கள் தானே காரணம்?

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஏற்றுமதி - இறக்குமதி விதிமுறைகள் ஆகியவற்றால் சிறுகுறு தொழில்கள் முடங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட இந்த சிறு-குறு தொழில் வர்த்தகர்களை இந்த கொரோனா காலத்தில் அழைத்து பேசினாரா பழனிசாமி. அவருக்கு அப்படி ஒரு யோசனை ஏன் வரவில்லை? அப்படி யோசனை வராது. ஏனென்றால் அவர் இதயத்தில் மக்களுக்கு இடமில்லை. இத்தகைய பழனிசாமிக்கு மக்கள் மனதில் இடமில்லை என்பதை உணர்த்தும் தேர்தல் தான் இந்தத் தேர்தல். அவரை வீட்டுக்கு அனுப்பிய பிறகு கோட்டைக்குள் சென்று ஆட்சி அமைக்கும் திமுக! உங்கள் கவலைகள் அனைத்தையும் தீர்க்கும்.

திருப்பூரில் இருந்து தொழில் முனைவோருக்கு இந்த ஸ்டாலின் ஒரு உறுதியளிக்கிறேன். தொழில் வளர்ச்சிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மீட்சிக்கும் கழக அரசில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். செயல்திட்டமும் உங்கள் பங்கேற்புடன் வகுக்கப்படும் என நான் உத்தரவாதம் தருகிறேன். கழக ஆட்சி மக்களுடைய பொற்கால ஆட்சியாக அமையும். தலைவர் கலைஞர் அவர்கள் என்னென்ன நினைத்தாரோ, என்னென்ன சிந்தித்தாரோ, என்னென்ன திட்டங்களை கொண்டுவந்தாரோ அவற்றை எல்லாம் நிறைவேற்றுவோம்.

அவர் மறைகிற நேரத்தில் கூட கழகம் - கழகம் என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் - தமிழ்நாட்டு மக்கள் என்ற உணர்வோடுதான் அவர் கடைசிவரையில் இருந்தார். உழைத்தார். பாடுபட்டார். பணியாற்றினார். அத்தகைய கலைஞர் அவர்கள், ஸ்டாலினிடத்தில் எனக்குப் பிடித்தது உழைப்பு… உழைப்பு… உழைப்பு… என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

உழைப்பின் பிதாமகனாக விளங்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவரே அவ்வாறு எந்த நம்பிக்கையோடு சொன்னாரோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து, அவர் வழிநின்று என்னுடைய கடமையை நான் உறுதியாக நிறைவேற்றுவேன். நிறைவேற்றுவேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு நிறைவுரை ஆற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x