Published : 21 Feb 2021 12:47 PM
Last Updated : 21 Feb 2021 12:47 PM
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே முதல்வர் பழனிசாமி இன்று (பிப்.21) தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.14,400 கோடியில் காவிரி - தெற்கு வெள்ளாறு – வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் தொடக்க விழா, புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் இன்று காலை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள் முழுமை பெற்று, பயன்பாட்டுக்கு வரும்போது இந்தக் கால்வாயில் இருந்து விநாடிக்கு 6,360 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 43 ஆயிரம் ஏக்கரில் பாசனத்துக்கு உத்தரவாதம் ஏற்படும்.
திட்ட விவரம்:
இத்திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. இதில், முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை ரூ.6,941 கோடியில் 118 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக ஏற்கெனவே தமிழக அரசு ரூ.700 கோடியை ஒதுக்கியது. பின்னர், கால்வாய் வெட்டுவதற்கு குறிப்பிட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தமும் விடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT