Published : 21 Feb 2021 12:15 PM
Last Updated : 21 Feb 2021 12:15 PM

திருவள்ளுவர் மீது ஆரியக்கோலமா?- மாற்றாவிட்டால் - அறப்போர் வெடிப்பது உறுதி: வீரமணி கண்டனம்

சென்னை

திருவள்ளுவர் மீது ஆரியக்கோலம் திணிக்கப்பட்டுள்ள இந்த விஷமச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, உடனடியாக தமிழ்நாடு அரசு இதை நீக்கிட வழிவகை காண வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் மூலம் நடத்தப்படும் எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில், திருவள்ளுவரை ஒரு புரோகிதப் பார்ப்பனர்போல், காவியுடனும், பூணூல், குடுமியுடன் சித்தரிக்கப் பட்டுள்ள கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளதைக் கண்டு நம் நெஞ்சம் கொதிக்கிறது!

திருவள்ளுவர்மீது ஆரியக் கோலம் திணிக்கப் பட்டுள்ள இந்த விஷமச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்ற வள்ளுவரை இப்படிக் கொச்சைப்படுத்துவதா?

“வள்ளுவர் செய் திருக்குறளை

மறுவறநன் குணர்ந்தோர்

உள்ளுவரோ மனுவாதி

ஒருகுலத்துக் கொருநீதி”

என்றார் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை.

அந்த மனுவாகவே, இதன்மூலம் திருவள்ளுவர் ஆக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை யல்லவா?

காவிக் கூட்டத்தின் கபோதித்தனம்

காவிக் கூட்டத்தின் கபோதித்தனத்திற்கும், விஷமத் திற்கும் ஓர் எல்லையே இல்லையா?

முன்பு திருவள்ளுவரை காவி நிறத்தில் காட்டி, அவரது சிலையில் காவிச் சாயம் பூசியது யாரோ சில விஷமிகள் செயல் அல்ல என்பதும், ஆர்.எஸ்.எஸ். - ஆட்சி இயக்கத்தின் பின்பலத்தோடு தான் என்பதும் மத்திய கல்வி பாடத் திட்டப் புத்தகத்தில் திருவள்ளுவரை இப்படி ஆரியமயமாக்கியிருப்பது மூலம் தெளிவாக்கப் பட்டு விட்டது!

இதைக் கண்டு தமிழ்நாடு அரசும் குழப்படி தமிழக முதல் அமைச்சரும், கல்வி அமைச்சரும் வேடிக்கை பார்த்து, கைகளைக் கட்டி நிற்கப் போகிறார்களா?

உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் தனது கண்டனத்தைத் தெரிவித்து இதை நீக்கிவிட வழிவகை காண வேண்டாமா?

மாற்றாவிட்டால் - அறப்போர் வெடிப்பது உறுதி!

இதனை ஒரு வாரத்திற்குள் மாற்றாவிட்டால் தமிழ் நாடு எங்கும் பெருங் கிளர்ச்சி - அறப்போர் - வெடிப்பது உறுதி!

அப்பாடத்தைக் கொளுத்தி அதன் சாம்பலை மூட்டைகளாக அனுப்பப்படும். இதில் ஒத்தக் கருத்துள்ள உணர்வாளர்கள் ஒன்று திரளுவோம்!

வள்ளுவருக்கு இப்படி ஒரு படம் போடுவதன் உள்நோக்கம், வள்ளுவர் பற்றிய முந்தைய பழைய கற்பனைக் கதைக்கு உருவம் கொடுத்து அக்கதை உண்மை என்றே காட்டும் முயற்சியா? (பகலவன் என்ற பார்ப்பனருக்கும், ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தவர் திருவள்ளுவர் என்று மோசடியாக இதே ஆரியம் கதை கட்டி பிரச்சாரம் செய்தது உண்டே!)

எப்படி இருப்பினும் உடனடியாக இதனை நீக்காவிட்டால், பரவிடும் உணர்வுத் தீ நிற்காது!

திராவிட தமிழ் இனவுணர்வாளர்களே, குறளை உலகெங்கும் பரப்பிட விரும்பும் குறளன்பர்களே, நீங்கள் மவுனம் சாதிக்கலாமா? களங்காண ஆயத்தமாவீர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x