Published : 21 Feb 2021 10:38 AM
Last Updated : 21 Feb 2021 10:38 AM
சிவகங்கை அருகே சோழபுரம் இலுப்பை மரத்தடி 500 ஆண்டுகளாக 22 அரை கிராமங்களின் நீதிமன்றமாகச் செயல்பட்டு வருகிறது.
வரலாற்றுத் தொன்மை வாய்ந்தது சோழபுரம் கிராமம். மகாபாரத காலத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றபோது சோழபுரம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்ததால் விஜயபுரம் என அழைக்கப்பட்டது.
இக்கிராமத்தைச் சுற்றியுள்ள நாலுகோட்டை, ஒக்கூர், கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, அலவாக்கோட்டை உட்பட 22 அரை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு தாய் கிராமமாக சோழபுரம் உள்ளது.
மக்களின் பிரச்சினைகளுக்கு அந்தந்த கிராமங்களிலேயே அம்பலக்காரர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தி தீர்ப்பு வழங்கப்படும். தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்தால் சோழபுரத்தில் கூட்டம் நடக்கும். 22 அரை கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்யப்படும். இக்கூட்டம் சோழபுரம் கந்தனபொய்கை ஊருணி அருகே இலுப்பை மரத்தடியில் நடத்தப்படும்.
இம்மரம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கூட்டத்தில் 22 கிராம அம்பலகாரர்களும் பங்கேற்பர். இங்கு கூறப்படும் தீர்ப்பே இறுதியானது.இதை மீறி யாரும் செயல்பட முடியாது. காவல்நிலையம், நீதிமன்றம் விழிப்புணர்வால் கிராமக் கூட்டம் நடத்துவது குறைந்தாலும், சோழபுரத்தில் அவ்வப்போது 22 கிராம அம்பலகாரர்கள் கூடி முடிவு எடுக்கும் வழக்கம் தொடர்கிறது.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த நாகு என்பவர் கூறியதாவது: 22 அரை கிராமங்களில் மதுரை மாவட்டம் அவனியாபுரமும் உள்ளது. இது அரை கிராமமாக கணக்கிடப்படுகிறது. இந்த கிராமங்களுக்கும் எங்களுக்கும் திருமண சம்பந்தம் உள்ளது. எங்கள் ஊரில் சொல்லப்படும் தீர்ப்பு 22 அரை கிராமங்களையும் கட்டுப்படுத்தும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT