Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM
அதிகத்தூர் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள், இருளர் மற்றும் அருந்ததிஇனத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 50 பேருக்கு, திருவள்ளூர் கோட்டாட்சியர் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி இருப்பது, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் கோட்டாட்சியர் என்.பிரீத்தி பார்கவி கூறியதாவது:
திருவள்ளூர் தாலுகா, அதிகத்தூர் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் 20 பேர், இருளர் 20 பேர் மற்றும் அருந்ததியர் 10 பேர் என மொத்தம் 50 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள். இவர்கள் தலைமுறையில் யாரும் இதற்கு முன்பு வாக்களித்தது இல்லை.இந்நிலையில், தனிப்பட்ட முறையில் அவர்களின் வீட்டுக்குச் சென்று,அவர்களின் ஆதார் கார்டு, ரேஷன்கார்டு ஆகியவற்றைச் சேகரித்து, அதனுடன் அவர்களின் புகைப்படத்தையும் இணைத்து விண்ணப்பிக்கச் செய்தேன்.
அவர்களில் பெரும்பாலானோருக்கு கையெழுத்து போட தெரியாததால், கைவிரல் ரேகை பதிவை பெற்றுக் கொண்டேன். அவர்களிடம் இருந்து சேகரித்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணைய இளையதளத்தில் பதிவேற்றினேன். அதன் பிறகு, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தேர்தலைப் பற்றிய விழிப்புணர்வை அவர்கள் பெறவேண்டும் என்பதே என் இலக்கு. அவர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாளஅட்டையை அச்சிட்டு கொடுத்தால்தான், அவர்களுக்கு வாக்களிக்கும் பொறுப்பும், கடமையும் தோன்றும். எனவே, தேர்தல் ஆணையத்தில் தனிப்பட்ட முறையில் பேசி, அவர்கள் 50 பேருக்கு மட்டும் அடையாள அட்டையை தனியாக பதிவிறக்கம் செய்து வழங்கினேன் என்றார்.
தங்களது புகைப்படத்துடன் கூடியவாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட அவர்களுக்கு, அதை எப்போதும் நினைவுப்படுத்தும் வகையில், ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகளை கோட்டாட்சியர் வழங்கினார். தனிப்பட்ட முயற்சியில் நரிக்குறவர்களுக்கு வாக்காளர் அடையாள பெற்றுத் தந்த கோட்டாட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT