Published : 20 Feb 2021 07:46 PM
Last Updated : 20 Feb 2021 07:46 PM
மதுரையில் கிருமி நாசினி தெளிப்புக் கருவி வெடித்து ரசாயனம் பட்டு பார்வை இழந்த தூய்மை பணியாளருக்கு இழப்பீடு கேட்டு தாக்கலான மனுவுக்கு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த எம்.சாந்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
என் கணவர் மாரிமுத்து, மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்தார். நவ. 17-ல் சிங்கராயர் காலனியில் கிருமினி நாசினி தெளிக்கும் பணியின் போது கிருமி நாசினி கருவி வெடித்தது. அதிலிருந்து வெளியேறிய ரசாயனம் என் கணவரின் முகத்தில் பட்டது. இதில் என் கணவரின் கண்பார்வை 90 சதவீதம் பாதிக்கப்பட்டது.
கரோனா முன்களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்ப கவசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பின்பற்றவில்லை. என் கணவரின் கண் பார்வை பாதிக்கப்பட்டதுடன், வாய், உணவு குழாய் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளது. என் கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை.
கருவி வெடித்து என் கணவர் முகத்தில் ரசாயனம் பட்ட நேரத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் தண்ணீர் இல்லை. முதல் உதவி பெட்டி இல்லை. இவை இருந்திருந்தால் பாதிப்பை குறைத்திருக்க முடியும். எனவே என் கணவருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், எனக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பார்த்தீபன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், சுகாதாரத்துறை முதன்மை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT