Published : 20 Feb 2021 07:39 PM
Last Updated : 20 Feb 2021 07:39 PM
‘‘கரோனா ஊரடங்கின்போது 10 லட்சம் பேர் மீது வழக்குப் போட்டு, அதை வாபஸ் பெற்றதை சாதனையாகக் கூறுவது கோமாளிதனம்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த காங்., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இதுவரை மாறி, மாறி தான் கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் கடந்த முறை தான் அதிமுக தொடர்ந்து 2-வது முறையாக வென்றது.
முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் பழனிசாமி இருந்தாரா என்றே தெரியாது. ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சி.வி.சண்முகத்தைக் கூட கேள்விப்பட்டுள்ளேன்.
திடீரென பழனிசாமி முதல்வராகிவிட்டார். அவர் நான்கே கால் ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். நான்கு ஆண்டுகள் நீண்ட உறக்கத்தில் இருந்த அவர் கடந்த 3 மாதங்களாக ஊர், ஊராகச் சுற்றி வருகிறார்.
இது அரசுக்கு அழகில்லை. மேலும் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த 4 ஆண்டுகளாக என்ன செய்தார்.
அலாவுதீனின் அற்புத விளக்கைப் போன்று, தேய்த்த உடனே திட்டம் வந்துவிடுமா? இந்த கால்வாயை கட்டுவதற்கு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். ஏற்கெனவே அடிக்கல்நாட்டி, திட்டம் முடிந்து தற்போது தொடங்கி வைத்தால் பரவாயில்லை. இது எல்லாம் கண் துடைப்பு.
கரோனா ஊரடங்கு காலத்தில் 10 லட்சம் பேர் மீதான வழக்கை வாபஸ் பெற்றதாக வேடிக்கையான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். பத்து லட்சம் பேர் மீது வழக்கு போட்டதே முட்டாள்தனம். 10 லட்சம் பேர் மீது வழக்கு போட்டு, அதை வாபஸ் பெற்ற முதல்வர் என கின்னஸ் புத்தகத்தில் வேண்டுமானால் இடம்பெறலாம். வழக்கை வாபஸ் பெற்றதை சாதனையாகக் கூறுவது மோமாளித்தனம்.
அதிமுக கூட்டணியாக அழைத்து வருவது பாஜக என்ற பொல்லாத கட்சி. பாஜக இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது. சாதி, மத கலவரங்களை ஏற்படுத்துகிறது. சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது. விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
கனிமொழியை ஓர் அதிகாரி இந்தி தெரியவில்லையா என ஆணவமாகக் கேட்கிறார். இந்த ஆணவம் பிரதமராக மோடி இருப்பதால் வருகிறது. ஆனால் சோனியா காந்தி, மன்மோகன் சிங் இருந்திருந்தால் வந்திருக்காது.
தென்நாட்டு மண்ணில் பாஜ கட்சி முளைக்க விடக்கூடாது. இங்கும் வந்துவிட்டால் வடநாடு மாதிரி பாழாகிவிடும்.
ஊரடங்கில் இந்தியாவில் 3 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சென்றுள்ளனர். இது வேறு எங்கும் நடக்கவில்லை. அவர்களது குடும்பங்களை காப்பாற்றியது காங்., கொண்டு வந்த 100 நாள் வேலைத் திட்டம் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT