Published : 20 Feb 2021 05:39 PM
Last Updated : 20 Feb 2021 05:39 PM
மார்ச் மாத தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார் என, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப். 20) வெளியிட்ட அறிக்கை:
"நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுடன் அதிமுகவும், மேலும் சில கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த 'அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முழுவீச்சில் நடத்தி வருகிறது.
இப்பணியில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோரும் தமிழகத்தில் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஏற்கெனவே கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு திட்டமிடப்படடிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
மார்ச் 4 - கோயம்புத்தூர், திருப்பூர்
மார்ச் 5 - சேலம், தருமபுரி
மார்ச் 6 - சென்னை
ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் இந்த தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை பெருந்திரளாக பொதுமக்கள் பங்கேற்புடன் சக்தியாக வெற்றி பெறச் செய்ய கட்சி அணிகள் அதற்கான ஆயத்த பணிகளை முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT