Published : 20 Feb 2021 04:58 PM
Last Updated : 20 Feb 2021 04:58 PM
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியைக்கு மருத்துவச் செலவு தொகையை திரும்ப வழங்கும் உத்தரவை நிதித்துறை செயலர் நிறைவேற்றாததற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினராக உள்ளேன். மருத்துவ காப்பீட்டிற்காக எனது சம்பளத்தில் மாதம் தோறும் குறிப்பிட்ட அளவு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. 2018-ல் பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இதற்கு ரூ.1.22 லட்சம் செலவானது.
இந்தத் தொகையை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திரும்ப கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை, அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் மருத்துவமனைகள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறி மருத்துவ செலவு தொகை வழங்க மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் எனக்கு மருத்துவ செலவு தொகை வழங்க 2019-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நிதித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், மருத்துவ செலவு தொகையை திரும்ப வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.இளங்கோ வாதிட்டார்.
பின்னர் நீதிபதி, இந்த வழக்கில் நிதித்துறை (சம்பளங்கள்) செயலர் ஆஜராக ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அவர் நீதிமன்றத்தில் நேரிலோ, கணொலி காட்சி வழியாகவோ ஆஜராகவில்லை.
நீதிமன்ற உத்தரவுபடி மனுதாரருக்கு மருத்துவ செலவு தொகையை வழங்கவும் இல்லை. இதனால் நீதித்துறை செயலர் மீது என் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பதற்கு அவர் 15 நாளில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 18-க்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT