Published : 20 Feb 2021 04:44 PM
Last Updated : 20 Feb 2021 04:44 PM
சரித்திரம்தான் படைப்பேன், பிழை செய்ய மாட்டேன் என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வரின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் இன்று (பிப். 20) முதல் முறையாக காரைக்கால் வந்தார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆட்சியரகம் எதிரில் காவல் துறை சார்பில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஆட்சியரகத்தில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற அவர், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்பான விவரங்களை மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா பரவல் சூழலில் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். கரோனா பாதித்த நோயாளிகள் மட்டுமல்லாது பிற நோயாளிகளையும் சிறப்பாக கவனித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்வதற்காகத்தான் இங்கு வந்தேன்.
இங்கு கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடக்கத்தில் குறைவாக இருந்துள்ளது. மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், 25 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
யாரும் தடுப்பூசி போடுவதற்கு தயங்க வேண்டாம். 25 நாடுகள் நமது நாட்டு தடுப்பூசிக்காக காத்திருக்கின்றன. 34 நாட்களில் 1 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவில்தான் இவ்வளவு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் கரோனா பாதிப்பு இல்லை, தடுப்பூசி தேவையில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். தடுப்பூசி போட்டுக்கொள்வதில் புதுச்சேரி சற்று குறைவான சதவீதத்தில்தான் உள்ளது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நியமன எம்எல்ஏக்களை, பாஜக எம்எல்ஏக்கள் என துணைநிலை ஆளுநர் குறிப்பிட்டுள்ளது வரலாற்று பிழை என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, "நான் எப்போதுமே சரித்திரம்தான் படைப்பேன், பிழை செய்ய மாட்டேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்" என தமிழிசை தெரிவித்தார்.
தொடர்ந்து, காரைக்கால்மேடு மீனவக் கிராமப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தார். அங்குள்ள வளாகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார். பின்னர் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு ரொட்டி, பழங்கள் வழங்கி கலந்துரையாடினார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவை ருசித்துப் பார்த்தார். செயல்பாடுகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார்.
ஆளுநர் சென்ற பகுதிகளில், மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை மனுக்களை அளித்து தங்கள் தேவைகள் குறித்து எடுத்துக் கூறினர். தேவைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஆளுநர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT