Published : 20 Feb 2021 04:20 PM
Last Updated : 20 Feb 2021 04:20 PM
பிரதமர் மோடி வருகை புதுச்சேரி வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும் என, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப். 20) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரிக்கு வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அரசு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டம் என இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஜிப்மர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக, சாலை மேம்பாட்டு திட்டம், சாகர் மாலா திட்டம், மாணவர் விடுதி, கேல் இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டங்கள் தேர்தலுக்கு பிறகு புதுச்சேரி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை. முதல்வர் நாராயணசாமி அவரை முன்னிலைப்படுத்திக் கொள்வதையும், அவருடைய வளர்ச்சியையும் மட்டுமே பார்த்தார்.
மக்களுக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும் அவர் எதையும் செய்யவில்லை. சமீபத்தில் நான் காலாப்பட்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது, அங்கு ஒருவருக்கு அரசு பட்டா கொடுத்துள்ளது. ஆனால், நிலத்தை கொடுக்கவில்லை. எப்போதும் நிலத்தை கொடுத்துவிட்டுதான் பட்டா வழங்குவது வழக்கம். ஆனால், பட்டா என்ற பெயரில் பேப்பரை மட்டுமே கொடுத்துள்ளனர்.
இது இந்த அரசின் செயல்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும். புதுச்சேரியில் இலவச கல் வீடு கட்டும் திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, ஜவுளி பூங்கா, மீன் சந்தை, துறைமுக விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செய்ய வேண்டியுள்ளது. இந்த திட்டங்களுக்கான தொடக்கமாக பிரதமரின் வருகை அமையும்.
ராகுல் காந்தி சோலை நகர் மீனவர் பகுதிக்கு வந்தபோது ஒரு மூதாட்டி கூறிய குற்றச்சாட்டை முதல்வர் மறைத்துவிட்டு தவறான தகவலை மொழிப்பெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறுகிறார். முதல்வரின் செயல் ஏமாற்றும் வகையில் உள்ளது.
சுனாமி, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிதி நிறைய வழங்கியும், மாநில அரசு எதுவும் செய்யவில்லை. இதற்கு முதல்வர் முதல் தலைமை செயலாளர் வரை பொறுப்பு. காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ச்சி அடைந்துவிட்டது. வருகிற மே மாதத்தில் முறைகேடு, ஊழல் இல்லாத நல்ல நிர்வாகத்துடன் கூடிய நல்லாட்சி அமையும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது ராஜீவ் சந்திர சேகர் எம்.பி., மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT