Published : 20 Feb 2021 03:11 PM
Last Updated : 20 Feb 2021 03:11 PM
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி இன்று கும்பகோணத்தில் பொதுமக்கள் பெருந்திரள் பேரணியை நடத்தினர்.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று (பிப். 20) தனி மாவட்டம் கோரும் போராட்டக் குழுவின் சார்பில் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளும் பேரணி நடைபெறுவதாக போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்த பேரணி கும்பகோணம் மொட்டைக் கோபுரம் பகுதியிலிருந்து பழைய மீன் மார்க்கெட் வரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை போராட்டக்குழுவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மொட்டைக்கோபுரம் பகுதியில் பேரணி செல்ல திரண்டனர்.
இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அங்கு வந்த தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பேரணி செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தார். இதனால் அங்கு கூடியிருந்த போராட்டக்குழுவினர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேரணியை 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள் நடத்தி முடித்துக்கொள்ள போலீஸார் அனுமதி வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, மொட்டை கோபுரம் பகுதியில் தொடங்கிய பேரணி உச்சி பிள்ளையார் கோயில் அருகே முடிவடைந்தது.
தொடர்ந்து, உச்சி பிள்ளையார் கோயில் பகுதியில் போராட்டக்குழுவினர் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். உழவர் பேரியக்கம் மாநில தலைவர் கோ.ஆலயமணி, அமமுக மாநில துணை பொதுச் செயலாளர் எம்.ரெங்கசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். திருப்பனந்தாள் காசி மட அதிபர் ஸ்ரீலஸ்ரீ எஜமான் சுவாமிகள் பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் கும்பகோணம் பகுதி தொழிலதிபர் ராயா.கோவிந்தராஜன், குடந்தை அனைத்து வணிகர்கள் சங்க செயலாளர் சத்தியநாராயணன், வழக்கறிஞர் சங்க தலைவர் லோகநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தனியார் அமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT